இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாஸ்டர்'. விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 'கைதி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் விஜய்யுடன் இணைந்துள்ளது ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் பணிகள் முன்னரே நிறைவடைந்துவிட்டாலும், கரோனா நெருக்கடி காரணமாகத் திட்டமிட்டபடி படத்தை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில், தியேட்டர்கள் திறப்பதற்கு அரசு அனுமதியளித்ததையடுத்து, படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளிவர இருக்கும் இந்தப் படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சில சமூக ஊடகங்களில் இப்படக் காட்சிகள் பகிரப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இது குறித்து ட்வீட் செய்துள்ள படத்தின் தயாரிப்பு நிறுவனம் எக்ஸ்.பி.ஃபிலிம், "இணையத்தில் கசிந்துள்ள மாஸ்டர் படக் காட்சிகளை யாருக்கும் பகிர வேண்டாம். யாராவது இதுபோல பரப்புவது தெரிந்தால் 'report@blockxpiracy.com' என்கிற மின்னஞ்சலுக்குத் தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்" எனக் கூறியுள்ளது.
அதேபோல, இப்படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இதுகுறித்து ஒரு ட்வீட் செய்துள்ளார். அதில், "மாஸ்டரை உங்களிடம் கொண்டுவந்து சேர்க்க ஒன்றரை வருடங்கள் போராடியிருக்கிறோம். எல்லாம், நீங்கள் திரையரங்குகளில் வந்து படம் பார்த்து கொண்டாடுவீர்கள் என்ற நம்பிக்கையில்தான். லீக்கான காட்சிகளை தயவுசெய்து யாரும் பரப்பாதீர்கள். அனைவருக்கும் நன்றி. ஒரே ஒரு நாள்தான், அதன் பிறகு மாஸ்டர் உங்களுக்கு சொந்தமாகிவிடுவார்!" எனக் கூறியுள்ளார்.