Skip to main content

“பரியேறும் பெருமாளிலிருந்து வாழை வரை” - முதல்வர் குறித்து மாரி செல்வராஜ் நெகிழ்ச்சி

Published on 02/09/2024 | Edited on 02/09/2024
mari selvaraj thanked cm mk stalin appreciate vaazhai movie

மாரி செல்வராஜ் தனது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களை மையக்கருவாக வைத்து இயக்கியிருக்கும் திரைப்படம் வாழை. இப்படத்தை மாரி செல்வராஜும் அவரது மனைவி திவ்யாவும் இணைந்து தயாரித்திருக்கின்றனர். இப்படத்தில் இரண்டு சிறுவர்கள் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்க அவர்களுடன் இணைந்து கலையரசன், நிகிலா விமல், திவ்யா துரைசாமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் மற்றும் நவ்வி ஸ்டூடியோஸ் இணைந்து வழங்கியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்திருந்தார். இப்படம் கடந்த 23ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 

இப்படத்திற்கு பாரதிராஜா, மணிரத்னம், வெற்றி மாறன், ராம், மிஷ்கின், நெல்சன், சிவகார்த்திகேயன், சிம்பு, தனுஷ், பா.ரஞ்சித், கார்த்தி, லோகேஷ் கனகராஜ், கீர்த்தி சுரேஷ் என ஏகப்பட்ட பிரபலங்கள் பாராட்டு தெரிவித்தன. திரை பிரபலங்களைத் தாண்டி அரசியல் கட்சித் தலைவர்களான திருமாவளவன் எம்.பி, சீமான், ராமகிருஷ்ணன் ஆகியோரும் மாரி செல்வராஜைப் பாராட்டினர். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்படத்தை தற்போது பாராட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில், “உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உழைக்கும் மக்களின் வாழ்வியலையும் அவர்களின் வலியையும் பேசும் வாழை-யை சான் பிரான்சிஸ்கோவில் கண்டேன். படைப்பாளி மாரி செல்வராஜுக்கு அன்பின் வாழ்த்துகள். பசியுடன் சிவனணைந்தான் தவித்தபோது, ஆயிரம் வாழைத்தார்களை நமது இதயத்தில் ஏற்றிவிட்டார் மாரி!

பசிக்கொடுமையை எந்தச் சிவனணைந்தானும் எதிர்கொள்ளக் கூடாதென முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் உருவாக்கியதில் மகிழ்ச்சி பெற்றேன். காயங்கள் ஆறும் என்ற நம்பிக்கையுடன் மாற்றங்களை நோக்கிப் பயணத்தைத் தொடர்வோம்! தொடர்ந்து வெற்றிப் படங்களை எடுத்துவரும் மாரி செல்வராஜுக்கு மீண்டும் வாழ்த்துகள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதையடுத்து முதல்வரின் வாழ்த்துக்கு மாரி செல்வராஜ் நன்றி தெரிவித்து அவரது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “என் முதல் படமான பரியேறும் பெருமாளிலிருந்து கர்ணன் மாமன்னனை தொடர்ந்து இன்று வாழை வரை என் அத்தனை படங்களையும் பார்த்துவிட்டு உடனே அழைத்து பெரும் ப்ரியத்தோடு என் படைப்பையும்  என் உழைப்பையும் பெரும் நம்பிக்கையோடு கொண்டாடி வரும் தமிழக முதல்வர் மு.ஸ்டாலினுக்கு என் இதயம் நிறைந்த நன்றிகளை தெரிவித்துகொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்