காலா, சில்லுக்கருப்பட்டி, ஜெய் பீம் உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த மணிகண்டன் குட் நைட் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பு பெற்றது. இதையடுத்து பிரபுராம் வியாஸ் இயக்கத்தில் ஒரு படம் நடித்துள்ளார். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். கௌரி பிரியா கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது.
இந்த நிலையில் மணிகண்டன் நடிக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சினிமாக்காரன் நிறுவனம் சார்பாக வினோத்குமார் இப்படத்தை தயாரிக்க ராஜேஷ்வர் காளிசாமி இயக்குகிறார். மணிகண்டன் தவிர்த்து சான்வே மேகனா, குரு சோமசுந்தரம், இயக்குநர் சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டவில்லை.
ஒரு சாதாரண நடுத்தர குடும்பத்து இளைஞன் தன் மானத்திற்காகவும், தன் குடும்பத்தின் நலனுக்காகவும் எதிர்கொள்ளும் சவால்களும் சாகசங்களுமே இத்திரைப்படத்தின் மையக்கரு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் முழுவதும் கோயம்புத்தூரில் படமாக்கப்பட இருக்கிறது. படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.