Skip to main content

“பாட்டைக் கேட்டு அஜித் சொன்ன ஆச்சரியத் தகவல்” -  பாடலாசிரியர் விவேகா பகிரும் சுவாரசியம்

Published on 01/12/2022 | Edited on 01/12/2022

 

Viveka

 

மனிதனுக்கு பாடல்களும் இசையும் இல்லாத  வாழ்வு, முழுமையான வாழ்வு  இல்லை. நம்முடைய வாழ்வின் வெற்றி, தோல்வி, மகிழ்ச்சி, தனிமை என அனைத்து நிகழ்வுகளிலும் துணையாக இருப்பது பாடல்களும், இசையும் தான். இந்தப் பாடல்களைக் கொண்டாடும் நமக்கு, அது உருவாகும் விதம் பற்றி தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 

படத்தின் இயக்குநர், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என அனைவரும் விவாதித்து ஒரு பாடல் முழுமை பெறும் விதம் நிச்சயம் ஒரு அலாதியான அனுபவம். அந்த வகையில் நக்கீரன் ஸ்டுடியோ யூடியூப் சேனலில் வரும் பாட்டுக்கதை தொடரின் முதல் பாகத்தில் பாடலாசிரியர் விவேகா, ‘வீரம்’ திரைப்படத்தில் வரும் தனது பாடலான ‘ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்’ என்ற பாடலின் அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார். அதிலிருந்து…

 

‘ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும்’ வரிகள் பற்றி....

வீரம் படத்தில் கடைசியாக ரெக்கார்ட் பண்ண பாடல் இது என்று நினைக்கிறேன். இந்தப் படத்தின் அனைத்து பாடல்களையும் நான் தான் எழுதினேன். சிவா சார், வீரம் படத்தின் முழு கதையும் என்னிடம் முன்னதாக சொல்லி விட்டார். அதுக்கு முன்னாடியே  அவரிடம் சிறுத்தை படத்தில் ஒர்க் பண்ணியதால்  அவருடன் நல்ல நட்பு ஏற்பட்டு இருந்தது. பாடலில் இரண்டு வகை உள்ளது. படத்தின் விளம்பரத்திற்கு உதவுகிற பாடல்கள், படத்தின் கதை ஓட்டத்திற்கு தேவைப்படுகிற பாடல்கள் என இரு வகை உள்ளது. இந்தப் படத்தில் இந்தப் பாடலின் தேவை ஏனென்றால், ரீரெக்கார்டிங்கின் இடத்தை  இது எடுத்துக் கொள்கிறது.

 

ஹீரோ விழுந்துள்ளார். அவர் எழுந்திருப்பாரா என்ற நிலையில், எல்லோரும் எழுந்திருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் போது, அவர் ஆக்ரோசமான மனநிலையில் எழுந்திருக்கும் போது பின்னணியில் இந்தப் பாடல் ஒலிக்கிறது. மந்திர உச்சாடனம் இருக்கிற மாதிரி அவர் எதிர்பார்த்தார். சாதாரண வார்த்தைகள் இல்லாமல், அதை கேட்கும்போதே வேறு மாதிரி ஒரு உணர்வு வர வேண்டும் என்பது தான் அவருடைய எதிர்பார்ப்பு எனும் போது,  அப்போது அதற்கு மிகச்சரியான முறையில் மணிப்பிரவாள  நடையில் எழுதலாம்னு  நினைச்சேன். சமஸ்கிருதமும், தமிழும் கலந்த ஒரு மொழிநடையைப் பயன்படுத்துவதன் மூலம் ஒரு வித்தியாசமான உணர்வைக் கொண்டு வர முடியும் என்று நினைத்து எழுதினேன்.

 

இவ்வாறு எழுதலாமான்னு கேட்டுட்டு அங்கேயே உட்கார்ந்து ஸ்டுடியோவிலேயே எழுதிய பாடல்தான் இது. இதை எழுதி முடித்தவுடன், தேவி ஸ்ரீ பிரசாத் பார்த்தவுடன், ஆகா! ரொம்பப் பிரமாதமாக இருக்கு என்று சொல்லி விட்டு, உடனே அவர் கம்போஸ் செய்தார். அதன் பிறகு இந்தப் பாடலைக் கேட்கும் போது, அதனுடைய வீச்சு மிகப்பெரிய அளவில் இருந்தது. கதை ஓட்டத்திற்கு என எழுதியப் பாடல் படத்தின் விளம்பரத்திற்கும் மிகப்பெரிய அளவில் பயன்பட்டது. ஒரு நிமிட ட்ரைலரிலேயே இந்தப் பாடல் மிகப் பெரிய வெற்றி பெற்றது.

 

இந்தப் பாடலில் கண்டிப்பாக இடம்பெற வேண்டியது என நீங்கள் நினைத்தது பற்றி....


சூழலை பொறுத்து, கதையைப் பொறுத்து இருக்கு. பாடல்களை எழுதும் போது கதாநாயகர்கள் மனதில் வருவார்கள். பாடலுக்கு வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும் போது கதாநாயகிகள் கூட மனதில் வருவார்கள். அஜித் போன்ற மிகப்பெரிய ஹீரோக்களுக்கு எழுதும்போது ரசிகர்களையும் இந்தப் பாடலில் அவர்களின் எதிர்பார்ப்பையும்  பூர்த்தி செய்ய வேண்டும் என்ற வகையில்தான் எழுதினேன். வளர்ந்து வரும் ஹீரோக்களுக்கும், புதிதாக முதல் படம் நடிக்கும் ஹீரோக்களுக்கும் இது போன்று எழுதி இருக்க மாட்டேன்.  இந்தப் படத்தின் கதாநாயகன் அஜித் என்பதால்தான் இந்தப் பாடல் எழுதினேன். அப்போது தான் ரசிகர்கள் ஒத்துக்கொள்வார்கள்.


நால்வகை படைகளையும் துவம்சம் செய்யக்கூடிய  வலிமை மிக்க ஹீரோ எங்கள் ஹீரோ என ஏற்கனவே ரசிகர் மனதில் பதிந்து விடும். அப்போது இந்த வரிகளை பாடலில் வைக்கும் போது தான் பாடல் வலிமை பெறுகிறது. பாடலாசிரியராக யாருக்கு எந்தப் பாடல் எழுத வேண்டும் என்பதை அறிந்து இருக்க வேண்டும். இந்தப் படத்தின் கதாநாயகன் அஜித் என்பதால் உருவான பாடல்தான் இது.


இந்தப் பாடலின் ஆரம்ப வரிகளில் ஏதாவது சவால்கள் இருந்ததா...


குறைந்த நேரத்தில் ஸ்டுடியோவிலேயே யோசித்து எழுதப்பட்ட பாடல்தான் இது. சீக்கிரமாக எழுதி முடிக்கப்பட்ட பாடல் இது. இந்தப் பாடல் முழுவதும் ஏறக்குறைய இருபது நிமிடங்களில் எழுதியது. குறுகியக் காலகட்டத்தில் எழுதிய பாடல். நான் எங்காவது மேடை ஏறினால் எனக்கே  இந்தப் பாடலை ஒலிக்கச் செய்து விடுகிறார்கள். இதை நான் மகிழ்ச்சியாகவும், கௌரவமாகவும் கருதுகிறேன்.


பாடலின் முதல் நான்கு வரிகளை பற்றி...
‘ரத கஜ துரக பதாதிகள் எதிர்ப்பினும் 
அதகளம் புரிந்திடும் வீரம் 
இவன் மத புஜம் இரண்டும் மலையென எழுந்திட 
செருக்களம் சிதறிடும் நேரம்...’


நால்வகை படைகள் எதிர்த்தாலும் கூட அதை எல்லாம் துவம்சம் செய்பவன் தான் நாயகன். செருக்களம் என்றால் போர்க்களம்.  அந்தப் போர்க்களத்தை சிதறடிக்கக் கூடிய மாபெரும் வீரம் கொண்ட ஒரு மாமனிதன், சக மனிதனின் துயரம் எனக் கசிந்ததும் அகம் பதறி எழும் வீரம். வீரம் என்பது ஒருவனை அடிப்பது மட்டும் இல்லை. சக மனிதன் பிரச்சனைக்கு உள்ளாகிறான் என்றால் அவனுக்காகப் பேசுவது, செயல்படுவது கூட வீரம் தான்.


சமீபத்தில் கூட அண்ணாத்த படத்தில் ஒரு பாட்டில்,  சில நேரங்களில் எதிரிக்கு உதவுவது கூட மிகப்பெரிய வீரம் தான். நம்முடைய தவறை ஒத்துக் கொள்வது கூட மிகப்பெரிய வீரம் தான் என்று எழுதி இருந்தேன்.


தேவி ஸ்ரீ பிரசாத் உடனான பயணம்....


அவருடைய படத்தில் என்னுடைய வரிகளுக்கு பெரிய முக்கியத்துவம் இருக்கும். அவருடன் நான் இணைந்து பணியாற்றிய எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட் தான். அவர் வரிகளை மதிப்பவர். அவருடைய இசையில் என்னுடைய வரிகள் புதைந்து போன அனுபவம் எனக்கு  இல்லை. அதிலும் குறிப்பாக இந்தப் பாடலில், பாடலின் வரிகள் மேலோங்கி மிகச்சரியாக இருக்கும். பின்புலத்தில் இசையும் அதற்குச் சரியான முறையில் சமன்படுத்தி இருக்கும்.


இந்தப் பாடலில் ஒரு டயலாக் வரும். அதற்காக அஜித் சார் ஸ்டுடியோவுக்கு வந்திருந்தார். அப்போது சொன்னார், இந்தப் பாட்டைக் கேட்டபிறகு எங்க வீட்டில் எல்லோரும் இந்தப் பாட்டுக்கு ரசிகர்னு சொன்னார். வீட்டில் எல்லோரும் ரிங்டோனாக  இதை வைத்துள்ளார்கள் என்று சொல்லி, கட்டியணைத்துப் பாராட்டினார். அவருக்கும் இந்தப் பாடல் அவ்வளவு பிடிக்கும்.


இந்தப் பாடலின் முதல் அங்கீகாரம்...


ட்ரைலர் வந்த போதே இந்தப் பாடல் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் இருந்தது. பெரிய வரவேற்பைப் பெற்றது. ஒருத்தர், ரெண்டு பேருனு சொல்ல முடியாது. போற இடமெல்லாம் பாராட்டுகள் வந்தது. வெளிநாட்டுக்குச் செல்லும் போது கூட  இந்தப் பாடலுக்கு நிறையப் பாராட்டுகள் கிடைத்தது. அஜித் ரசிகர்கள் மில்லியன் கணக்கில் அடங்குவார்கள். தொழிலதிபர்கள், அவர்களின் உயரம் பெரியதாக இருக்கும். வாழ்க்கைத்தரம் வேற லெவலில் இருக்கும். ஆனாலும் கூட, அஜித்தை ஒரு முறையாவது பார்த்து விடுவோமா என்று கடைநிலை ரசிகராக  என்னிடம் கேட்பார்கள். இந்தப் பாடலுக்கு உரிய பாராட்டுகளாக  நூற்றுக்கணக்கான பாராட்டுகள் பல்வேறு தளங்களில் இருந்து வந்தது.


வீரம் படத்தில் இந்தப் பாடல் முக்கியமான ஒரு பாடலாக இருந்தது. எனக்கு இந்த மாதிரி பாடல்கள் நிறைய வேண்டும் என்றனர். அதற்குப் பிறகு, ராம் கோபால் வர்மா அவர்களுக்கு ரத்த சரித்திரத்தில் இதே போன்று ஒரு பாடல் எழுதினேன்.

 

இயக்குனர் சிவாவுடன் தொடர்ந்து பணியாற்றுவது பற்றி...


சூர்யாவின் நாற்பத்து இரண்டாவது படம் வரைக்கும் தொடர்ச்சியாக பணியாற்றிக் கொண்டிருக்கேன். அவர் என்ன எதிர்பார்ப்பார் என்று தெரியும். அவர் நல்லா தமிழை விரும்புவார். நல்ல தமிழ் வாசிப்பு அனுபவம் உள்ளவர். நல்ல கவித்துவமான வரிகளைச் சொன்னால் மாற்றவே மாட்டார். ‘வானே வானே..’ பாடல் போன்ற அழகான வரிகள் எழுதினால் நமக்கு தன்னம்பிக்கை வரும். நல்ல தமிழை எழுதினால் ஒத்துக்கொள்வார். அதனால் இந்த வகையில் இது மாதிரி தொடர்ச்சியாக பாடல்கள் எழுதுவது  நல்ல அனுபவம். இது போன்று நிறைய இயக்குனர்களுடன் தொடர்ச்சியாக இயங்குவதன் மூலம் கடந்த படங்களில் அவர்கள் என்ன எதிர்பார்த்தார்கள், அவர்களுடைய எதிர்பார்ப்பு என்னவாக இருக்கும் என்பதை அறிய முடியும். கூடுதல் பரிச்சயம் இருக்கும். காட்சியமைப்புகள் என்னவாக இருக்கும் என்பதை அறிய முடியும்.
 

 

 

சார்ந்த செய்திகள்