நயன்தாரா... தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர், 'தலைவர்', 'தல' 'தளபதி' என நாயகர்களின் ஆதிக்கம் அதிகமுள்ள தமிழ் சினிமாவில் கடந்த ஆறு ஏழு ஆண்டுகள் முன்னணி நாயகியாகவும், பல நாயகர்களுக்கு இணையான வர்த்தகம் உடையவராகவும் விளங்குபவர்.
முன்னேறிய பலரையும் போல இவரது உயர்வும் எளிதாக நடந்ததல்ல என்றாலும் குறிப்பாக நயன்தாராவின் வாழ்விலிருந்து நாம் கற்றுக்கொள்ள சில பாடங்கள் உண்டு.
- காதல், ப்ரேக்கப்... மீண்டும் காதல், ப்ரேக்கப்... என தொடர்ந்து உறவு சிக்கல்கள் மிகுந்த வாழ்வு நயன்தாராவினுடையது. முதலில் சிம்புவுடன் காதல், பின் பிரிவு, அதற்குப் பிறகு அவருடன் தனிமையிலிருந்த புகைப்படங்கள் பொது வெளியில் வெளியானபோது அது நயன்தாராவுக்கு கொடுத்த மன அழுத்தம் மிகப்பெரியது. பின்னர் பிரபுதேவாவுடனான காதலில் அவரது பெயரை பச்சைக்குத்திக் கொண்டார். அந்த உறவிலும் விரிசல் ஏற்பட்டு, பின்னர் கிசுகிசுக்கள், பின் விக்னேஷ் சிவனுடன் ரிலேஷன்ஷிப் என நயன்தாராவின் தனிப்பட்ட வாழ்க்கை எப்போதும் வெளிச்சத்திலேயே இருந்துள்ளது. ஆனால், ஒவ்வொரு பிரிவு ஏற்பட்டபோதும் அதிலிருந்து அவர் மீண்டு வந்த விதமும் அது அவர் தொழிலை பாதித்தபோது, மீண்டும் அவர் தன் இடத்தைப் பிடித்த விதமும் கவனிக்கப்பட வேண்டியவை. ஏனெனில் ஏற்கனவே தமிழ் சினிமா வரலாற்றில் பல நாயகிகளின் கேரியரை முடித்துவைத்தது, ஒரு காதலோ அல்லது ஒரு காதல் பிரிவோவாகத்தான் இருக்கும்.
- முதலில் ’ஐயா’ படத்தில் மிக இளம் பெண்ணாக அறிமுகமாகி, படத்தின் வெற்றியால் உடனே ’சந்திரமுகி’ படத்தில் ரஜினியுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், வெகு விரைவிலேயே காதலால் ஏற்பட்ட கவனக்குறைவு திரைப்பயணத்தை பாதித்தது. மேலும் உடல் பருமனானததால் கஜினி, ஈ போன்ற படங்களில் நயன்தாராவின் தோற்றம் கிண்டல் செய்யப்பட்டது. இப்படி கிட்டத்தட்ட அவரது திரைவாழ்வு முடிந்துவிட்டது என்று எண்ணப்பட்டபோது ’பில்லா’ படத்தில் யாருமே எதிர்பாராத வண்ணம் எடையைக் குறைத்து செம ஸ்லிம்மாகவும், ஸ்டைலிஷாகவும் ரீ-எண்ட்ரி கொடுத்தார் நயன்தாரா. தமிழ் சினிமாவில் பொதுவாக ரீ-எண்ட்ரி என்பது எல்லாம் ஹீரோக்களுக்கான விஷயமாகவே இருந்தது. அந்த வகையில் நயன்தாரா ஒரு தனித்துவமான நாயகிதான்.
- நயன்தாரா முதலில் சிம்பு நடித்த ’தொட்டி ஜெயா’ உள்ளிட்ட பல படங்களில் நடிக்க முயற்சி செய்து நிராகரிக்கப்பட்டவர். பின்னர், தன் தொடர் முயற்சியால் தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்து, முன்னணி நாயகர்களுடன் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இன்று ’லேடி சூப்பர்ஸ்டார்’ என்னும் உயரத்திற்கு வளர்ந்திருக்கிறார். தமிழில் மட்டுமல்ல தென்னிந்தியாவின் முன்னணி நாயகிகளில் ஒருவர் நயன்தாரா.
- சிம்புவுடனான காதலும் பிரிவும்தான், நயன்தாரா வாழ்வில் மிகப்பரபரப்பாக எதிர்மறையாக பேசப்பட்ட பகுதி. சிம்புவும் அந்தப் பிரிவுக்குப் பிறகு பல மேடைகளில் நயன்தாராவின் பெயரை குறிப்பிடாமல் காதல் தோல்வி பற்றியும் ‘என்னை விட்டுட்டு போய்ட்டா’ என்னும் தொனியிலும் தொடர்ந்து பேசி வந்தார். இத்தகைய அனுபவத்திற்குப் பிறகு, அவர் முன்னணி கதாநாயகியான பிறகும் மீண்டும் அதே சிம்புவுடன் நடிப்பதற்கு அழைப்பு வந்தது. வேறு எந்த பெண்ணாக இருந்தாலும் பெரும்பாலும் மறுத்திருப்பார். ஆனால், நயன்தாரா ’இது நம்ம ஆளு’ படத்தில் நடித்தார். இன்னும் சிலர் ’அவர்கள் மீண்டும் சேர்ந்துவிடுவார்கள்’, ’நயன்தாரா மீண்டும் மனம் மாறிவிடுவார்’ என்றெல்லாம் பேசினார்கள். ஆனால், நயன்தாராவோ தொழில்முறையாக மட்டுமே அந்த வாய்ப்பை அணுகினார். அந்தத் தெளிவும் ஆளுமையும் இன்றைய இளைஞர்கள் பலருக்கும் ஒரு பெரிய ரிலேஷன்ஷிப் லெஸன் ஆகும்.
- நயன்தாரா தேர்ந்தெடுக்கும் பாத்திரங்கள்... முதலில் அப்படி இப்படி இருந்தாலும் ’ராஜா ராணி’யில் தனது 2வது ரீ-எண்ட்ரியிலிருந்து தனக்கு முக்கியத்துவம் உள்ள பாத்திரங்களிலேயே நடித்தார். இடையில் ’சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் வாய்ப்பு வந்தபோது அதை மறுத்தவர், ’எதிர்நீச்சல்’ படத்தில் தனுஷ் நட்பிற்காக ஒரு பாடலில் ஆடினார். பிறகு, இனி பெரிய நடிகர்களின் படம் என்றாலும் சிறிய பாத்திரங்களில் நடிப்பதில்லை என்று முடிவெடித்து ஜெயம் ரவி, சிவகார்த்திகேயன் படங்களிலும் அவர்களுக்கு இணையான பாத்திரங்களில் நடித்தவர், மாயா, டோரா, அறம், கோகோ என தன்னை மையப்படுத்திய படங்களிலும் நடித்தார். இந்த ஒவ்வொரு படத்திலும் நயன்தாராவின் கதாபாத்திரம் மட்டுமல்லாது அவரது தோற்றம், உடை என ஒவ்வொன்றும் அவரது ஆளுமையை வெளிப்படுத்தின.
நயன்தாராவின் 'கோலமாவு கோகிலா' படத்திற்கு, சென்னையில் முதல் நாள் அதிகாலை ஐந்து மணி காட்சி திரையிடப்பட்டது. இப்படி ஆண்கள் கோலோச்சும் ஒரு துறையில் அவர்களுக்கு இணையாக மிக வெற்றிகரமாக திகழ்கிறார். இப்படி திகழும் பலர் மிக இறுக்கமாகவும் கடினமானவர்களாகவும் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் அப்படியில்லாமல் நயன்தாரா தொட்டிருக்கும் இந்த உயரம் நாமெல்லாம் எடுத்துக்கொள்ளக் கூடிய லைஃப் லெஸன்தான்.