மலையாளத்தில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ், அபர்ணா பாலமுரளி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடிப்பில் சமீபத்தில் வெளியான '2018' படம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. வசூலிலும் உலகம் முழுவதும் ரூ.160 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் அதிக வசூல் செய்த மலையாள படம் என்ற பெருமையும் பெற்றுள்ளதாகப் பேசப்படுகிறது. மலையாளத்தை தொடர்ந்து சமீபத்தில் இப்படம் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியானது.
இப்படம் இன்று முதல் ஓடிடியில் வெளியாகியுள்ளது. இந்நிலையில் கேரளா திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு, திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படங்களை 5 வாரங்களுக்குள் ஓடிடியில் வெளியிடுவதை கண்டித்து இன்று (07.06.2023) மற்றும் நாளை (08.06.2023) கேரளாவில் உள்ள அனைத்து திரையரங்குகளும் மூடப்படும் என அறிவித்துள்ளார்கள். மேலும் ரூ. 200 கோடி வசூல் செய்வதை இது தடுத்துள்ளதாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கேரளா திரையரங்க உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் கே.விஜய்குமார், "2018 மற்றும் ‘பச்சுவும் அத்புத விளக்கும்’ ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் விரைவில் வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு தான் இந்த திரையரங்குகள் மூடும் போராட்டம். திரையரங்கு வருகை குறைவதற்கு முக்கியக் காரணம். படம் வெளியான சில நாட்களுக்குள் ஓடிடியில் எளிதாக அணுக முடியும் என்பதே" என்றார்.