சினிமாவில் நடிகைகளுக்குப் பாலியல் தொல்லை கொடுப்பதாக பரபரப்பாக குற்றம் சாட்டி அரை நிர்வாணப் போராட்டம் நடத்திய நடிகை ஸ்ரீரெட்டி தெலுங்கு பட உலகை சேர்ந்த பல்வேறு நடிகர்கள், இயக்குனர்கள், தயரிப்பாளர்கள் மீது சரமாரியாக பாலியல் குற்றசாட்டுகளை அடுக்கி தெலுங்கு திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். பின்னர் தமிழ் சினிமாவின் பக்கம் திரும்பிய அவர் பிரபல இயக்குனர்கள், நடிகர்கள் மீது பாலியல் புகார்கள் கூறி தமிழ் திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் கோலிவுட்டின் இருண்ட பக்கத்தில் உள்ள ரகசியங்களை வெளியிட உள்ளதாகவும், தனது பட்டியலில் மேலும் சிலர் இருக்கிறார்கள் என்றும் தெரிவித்திருந்தார். மேலும் இது தமிழ் சினிமாவிற்கான நேரம் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு எச்சரித்தார்.
இதற்கிடையே பாண்டிராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த 'கடைக்குட்டி சிங்கம்' படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதை அடுத்து, நடிகர் கார்த்தி மற்றும் படக்குழுவினர் ஒவ்வொரு ஊராக திரையரங்குகளுக்கு சென்று ரசிகர்களை சந்தித்து வருகின்றனர். நேற்று கார்த்தி, பாண்டிராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் புதுக்கோட்டையில் உள்ள பிரபல திரையரங்கு ஒன்றில் கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்த ரசிகர்களை சந்தித்து விட்டு பின் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்.... "துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, கடைக்குட்டி சிங்கம் படத்தை பார்த்துவிட்டு பாராட்டியுள்ளது பெருமைக்குரியது. அதேபோல் மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளுக்கு என்று கவனம் செலுத்தி திட்டத்தை வகுக்க வேண்டும் என்று துணைக் குடியரசுத் தலைவர் கடிதம் எழுதியிருப்பது வரவேற்கத்தக்கது. மேலும் பாலியல் தொல்லை குறித்து நடிகை ஸ்ரீரெட்டி கூறும் ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளுக்கு நடவடிக்கை எடுக்க முடியாது. நடிகர் சங்க உறுப்பினர்கள் யாராவது ஸ்ரீரெட்டி மீது புகார் தெரிவித்தால் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.