இந்தியில் வெற்றி பெற்ற ராஷ்மி ராக்கெட் படத்தின் எழுத்தாளர் நந்தா பெரியசாமி சமுத்திரக்கனியை வைத்து ‘திரு.மாணிக்கம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இப்படத்தில், பாரதிராஜா, அனன்யா, நாசர், தம்பி ராமையா, இளவரசு, ஸ்ரீமன், வடிவுக்கரசி, கருணாகரன், சாம்ஸ் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர். ஜி.பி.ஆர்.கே. சினிமாஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் 27ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக சமுத்திரக்கனியை சந்தித்தோம். அப்போது அவர் தன்னுடைய திரைப்பயண வாழ்க்கையைப் பற்றி நம்மோடு பகிர்ந்து கொண்டார்.
சமுத்திரக்கனி பேசுகையில், “எனக்கு 15 வயது இருக்கும்போது என்னுடைய அப்பா இறந்துவிட்டார். அவர் இறக்கும்போது எனக்கு சின்ன நம்பிக்கை கொடுத்துவிட்டுத்தான் சென்றார். அவருக்கு சினிமா என்றாலே பிடிக்காது. ஆனால் நான் 8ஆம் வகுப்பு படிக்கும்போதே சினிமா பார்க்கத் தொடங்கிவிட்டேன். ஒரு முறை பள்ளிக்குச் செல்லும்போது திரையரங்கம் ஒன்றில் முதல் மரியாதை படம் ஓடிக்கொண்டிருந்தது. நான் சாலையில் நடந்துபோகும்போது தியேட்டரில் இருந்து வந்த சந்தம் எனக்குள் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் தியேட்டருக்கு போகலாமா? என்று தோன்றியது. ஆனால் இன்னொரு பக்கம் அப்பா திட்டுவார் என்ற பயமும் இருந்தது. அதன் சரி பார்த்துக்கொள்ளலாம் என தியேட்டருக்கு போய் படம் பார்த்தேன். அன்றைக்குத்தான் எனக்கும் சினிமாவுக்குமான தொடர்பு ஏற்பட்டது.
அதன் பின்பு சினிமாவை நேசித்து அடிக்கடி பார்க்கத் தொடங்கினேன். அதற்காக வீட்டில் பல முறை அடி மற்றும் திட்டு வாங்கியுள்ளேன். என்ன ஆனாலும் மீண்டும் நான் தியேட்டரை நோக்கிப் போவதை நிறுத்தவில்லை. அப்போது சினிமா பார்க்க டிக்கெட் விலை ரூ. 40 பைசா, அந்த காசு கூட இல்லாமல் ஒரு போர்வையை போற்றிக்கொண்டு தியேட்டருக்கு அருகில் ஒரு பாறை இருக்கும். அங்கு படுத்துக்கொண்டு திரையரங்கில் இருந்து வரும் சத்தத்தை மட்டும் கேட்பேன். ஏற்கனவே பார்த்த படம் என்பதால் வெறும் சத்தத்தை மட்டும் கேட்டுவிட்டு, படம் முடிந்து எல்லோரும் போகும்போது அவர்களுடன் சேர்ந்து போவேன். அது எனக்கு படம் பார்த்த திருப்தியை கொடுத்தது. அந்தளவிற்கு நான் சினிமாவை நேசித்தால் சினிமாவில் சாதிக்க நினைத்து சென்னைக்கு ஓடி வந்து ஹோட்டலில் வேலை பார்த்தேன்.
பின்பு வீடு திரும்பிய போது, நான் சென்னை போன அந்த ஒரு வார இடைவெளியில் என் அப்பாவிடம் பெரிய மாற்றத்தைப் பார்த்தேன். என்னுடைய அம்மாதான் என்னை அடிக்க ஆரம்பித்தார். அம்மாவுக்கு நான் 10 நாட்களாக வீட்டில் இல்லாமல் இருந்ததால் பிள்ளையைக் காணவில்லையே என்ற தவிப்புடன் இருந்தார். அதன் பிறகு, என்னுடைய விருப்பத்தை அப்பாவிடம் சொன்னேன். அவர் படித்து முடித்துவிட்டு உனக்கு பிடித்ததைச் செய் என்றார். அதோடு அவர் அம்மாவிடம், ‘பையன் நமக்குத் தெரியாததைச் செய்ய வேண்டும் என நினைக்கிறான் முடிந்தால் கூட நிற்போம். இல்லையென்றால் விலகிவிடுவோம்’ என்று சொல்லி ஆறுதல் படுத்தினார். அப்பா சொன்னதால் நானும் படித்துவிட்டு சினிமாவுக்கு போய்விடலாம் என்று நினைத்து சந்தோசப்பட்டேன். ஆனால் அடுத்த மாதத்தில் அப்பா இறந்துவிட்டார். அதனால் மீண்டும் என்னுடைய வாழ்க்கை பூஜ்ஜியமானது.
கிராமப் புறங்களில் தகப்பன் இல்லாமல் வளரும் பிள்ளை என்ன செய்தாலும் அம்மாவைத்தான் குறை சொல்வார்கள். அப்படிப்பட்ட சூழலில் இருக்கும்போது, நான் 12ஆம் வகுப்பு முடித்துவிட்டு எனக்குப் பிடித்ததை அப்பா செய்யச் சொன்னதால் அம்மாவிடம் பணம் கேட்டேன். அதற்கு அம்மா நீ போய்விட்டால் சொந்தகாரர்கள் வாயிலிருந்து எப்படித் தப்பிப்பது என்று புலம்பினார். அதன் பின்பு, ஒரு வழியாக அம்மாவை பணம் தர ஒப்புக்கொள்ள வைத்தேன். தன்னுடைய தங்க செயின் ஒன்றை ஊரிலுள்ள பெரியவரிடம் அடகு வைத்துவிட்டு எனக்கு செலவுக்கு ரூ.1800 பணம் கொடுத்தார். அதோடு சின்ன துணியில் ரூ.200 வைத்து, செலவுக்கு கொடுத்த பணம் காலியாகிவிட்டால் இதை வைத்துக்கொண்டு வீடு திரும்பிவிட வேண்டும் என்று சொன்னார்.
சென்னை வந்ததும் எனக்கு யாருமே தெரியாது. அப்படியே சென்னை முழுக்க சுத்த ஆரம்பித்தேன் அப்போது செல்லா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. என்னுடைய அண்ணன் பாண்டியன் என்பவரும் சென்னையில்தான் இருந்தார். இவர்களுடன் சென்னையில் இருக்கும்போது ஒரே வாரத்தில் அம்மா கொடுத்த ரூ.1800 காலியாகிவிட்டது. அதன் பின்பு மீதமிருந்த ரூ.200 வைத்து அம்மா சொன்னதுபோல் மீண்டும் வீட்டுக்குத் திரும்பிப் போனேன். அங்கு அம்மா என்னைப் பார்த்ததும் ‘நீ வரமாட்டனு எல்லோரும் சொன்னாங்க, ஆனால் நீ திரும்பி வந்ததே சந்தோஷம்’ என்று சொல்லிவிட்டு அடுத்ததாக சென்னைக்கு போக நினைத்தால் பணம் தருகிறேன் என்றார். இப்படித்தான் என்னுடைய சென்னை பயணம் ஆரம்பித்தது.
நான் இயக்குநராகி என்னுடைய பெயர் திரையில் வரும்போது நான் தேம்பி தேம்பி அழுதேன். அப்போது அம்மாவுக்கு கால் செய்தபோது எனக்கு பேச வார்த்தையே வரவில்லை. அதனால் அம்மா என்னிடம் ‘ஊருக்கு வந்துரு விவசாயம் பார்த்து பொழச்சுக்கலாம்’ என்று சொன்னார். பின்பு நான், படம் எடுத்துவிட்டேன் ரிலீஸாகிவிட்டது என்று சொல்லிவிட்டு, எனக்குத் தெரிந்த ஒருவரிடம் அம்மா படம் பார்க்க அழைத்துப் போகச் சொன்னேன். அம்மா படம் பார்த்துவிட்டு ‘எங்க என் புள்ளைய படத்துல காணோம்’ என்றார். அதன் பிறகு வீட்டுக்கு சென்று நான்தான் படத்தை எடுத்தேன் என்றேன். அதற்கு அம்மா ‘இன்னும் விவரம் இல்லாமலே இருக்க படத்துல வந்துருக்கணும்’ என்றார். அடுத்தாக சுப்ரமணியபுரம் படத்துக்கு அம்மாவை அழைத்துப் போனபோது கழுத்தை அறுக்கும் சீன் வந்தது. அப்போது சீட்டுக்கு கீழ் ஏதோ விழுந்துவிட்டு என்று சொல்லி அம்மாவை திசை திருப்ப நினைத்தேன். ஆனால், அம்மா அந்த காட்சியைப் பார்த்துவிட்டு ‘நீ ஊருக்கு வந்துரு எதுக்கு இவ்ளோ கஷ்டம்’ என்று வெள்ளந்தியாக பேசினார். இப்போது நான் ஊருக்குப் போனால் நான் கொடுத்த பணத்தை கல்யாணம், காது குத்துக்கு மொய் செய்ய வைத்துக்கொண்டு தான் சம்பாதித்த பணத்தில் இருந்து ரூ.500 கொடுப்பார்” என்றார்.