ரிஷப் ஷெட்டி நடிப்பில் கடந்த ஆண்டு கன்னடத்தில் வெளியான 'காந்தாரா' படம் பெரும் வெற்றி பெற்றது. கன்னடத்தில் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது.
இதனிடையே ‘தைக்குடம் பிரிட்ஜ்’ என்ற மலையாள இசைக்குழு காந்தாரா படத்தில் இடம்பெறும் 'வராஹ ரூபம்’ பாடல் தங்களின் 'நவரசம்' ஆல்பமில் இருந்து திருடப்பட்டுள்ளதாகக் கூறி பாடலுக்குத் தடை விதிக்க கோரி கோழிக்கோடு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்கள். இந்த மனு விசாரணைக்கு வந்தபோது திரையரங்குகளிலும் யூ-ட்யூப், ஸ்பாட்டிஃபை உள்ளிட்ட சில ஆன்லைன் ஸ்ட்ரீமிங் தளங்களிலும் ஒளிபரப்பத் தடை விதிக்கப்பட்டது.
இதையடுத்து கடந்த 8 ஆம் தேதி நடந்த விசாரணையில், கோழிக்கோடு காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கில் இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு உயர்நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. மேலும் 5 நிபந்தனைகளை விதித்து விசாரணைக்கு ஆஜராக கூறியது. இந்த நிபந்தனையை எதிர்த்து இயக்குநரும், தயாரிப்பாளரும் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்த நிலையில் அதை விசாரித்த உச்சநீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக இறுதி தீர்ப்பு வரும்வரை 'வராஹ ரூபம்’ பாடலை ஒளிபரப்பக் கூடாது என்ற கேரள உயர்நீதிமன்றத்தின் நிபந்தனைக்கு தடை விதித்தது. இந்த நிலையில் நீதிமன்றத்தின் ஆணையின்படி தயாரிப்பாளர் விஜய் கிர்கந்தூர் மற்றும் இயக்குநர் ரிஷப் ஷெட்டி ஆகியோர் அதிகாரி முன் விசாரணைக்கு ஆஜராகினர். இருவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காந்தாரா படத்தை புகழ்ந்துள்ளார். இது தொடர்பாக அவர் பேசுகையில், "காந்தாரா படம் பார்த்த பின்பே இதுபோன்ற வளமிக்க பாரம்பரியங்களை மாநிலம் கொண்டிருக்கிறது என அறிந்து கொண்டேன். நாட்டில் வெகுசில பகுதிகளே நாட்டை வளப்படுத்தும் வகையில் விவசாயம் மேற்கொண்டு வரும் மக்களை கொண்டிருக்கிறது. கடினம் வாய்ந்த சூழலிலும் அவர்கள் விவசாய பணியில் ஈடுபட்டு நாட்டை வளமடைய செய்கின்றனர்" என்றார்.