கமல்ஹாசன் தற்போது ஷங்கர் இயக்கும் 'இந்தியன் 2' மற்றும் பாலிவுட்டில் நாக் அஷ்வின் இயக்கும், 'கல்கி 2898 ஏடி' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். மேலும் அ.வினோத் இயக்கும் புதிய படம், மணிரத்னம் இயக்கும் ஒரு படம் மற்றும் மகேஷ் நாராயணன் இயக்கத்தில் ஒரு படம் எனக் கைவசம் வைத்துள்ளார்.
'கல்கி 2898 ஏடி' படத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோனே உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடிக்கின்றனர். இப்படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோ அண்மையில் அமெரிக்காவில் நடைபெற்ற காமிக் கான் நிகழ்வில் வெளியான நிலையில் அதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் கமல். இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் கமல், அங்கு ஆஸ்கர் வென்ற மேக்கப் ஆர்ட்டிஸ்ட் மைக்கேல் வெஸ்ட்மோருடன் சந்திப்பு மேற்கொண்டார். இது குறித்து நெகிழ்ச்சியாக ஒரு பதிவைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் கமலின் 'அவ்வை சண்முகி', 'ஹே ராம்', 'தசாவதாரம்' உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து இந்தியன் 2விலும் பணியாற்றுகிறார்.
இதனிடையே 'கல்கி 2898 ஏடி' படம் குறித்துப் பேசிய கமல், "நான் இந்த படத்தில் இணைந்ததும், படத்தின் ஒரு பகுதியாக இருப்பதையும் யாரும் நம்பவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால், கதாநாயகன் பிரபாஸ் என் கையைப் பிடித்து நன்றி கூறினார். மேலும் இதில் நீங்களும் ஒரு பகுதி என்பதை என்னால் இன்று வரை நம்ப முடியவில்லை. உங்களை எப்படி படத்தின் உள்ளே அழைத்து வந்தார்கள் என்று நான் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறேன் என்றார். இந்த படத்தில் பெரிய நடிகர்கள் இருந்தாலும் கதையை விட வேறு எதுவும் பெரிதில்லை என்பதைப் புரிந்துகொள்ளும் பணிவு அனைவரிடமும் இருக்கிறது.” என்றார்.
மேலும், தன் கதாபாத்திரம் குறித்துப் பேசிய அவர், “இயக்குநரின் நோக்கமும் நான் ஒப்புக்கொண்ட காரணமும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நம்மிடம் ஒரு சிறந்த புராண நூல் இயங்கி வருவதே. ராமாயணதிலும் மகாபாரதத்திலும் தவிர்க்க முடியாத கதாபாத்திரங்கள் இருக்கின்றன. அதைப்பற்றிய குறியீடுகளைக் கொடுத்தால் போதும், கதை எதை நோக்கிப் போகிறது, அடுத்த காட்சி என்ன என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்" என்றார்.