எம் கே ஃபிலிம் ஒர்க்ஸ் சார்பில் கார்த்திகேசன் தயாரிப்பில் மணி மூர்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'லாரா'. இப்படம் காரைக்கால் பகுதியில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் கிரம் த்ரில்லர் ஜானரில் உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் முருகா, பிடிச்சிருக்கு படங்களின் நாயகன் அசோக்குமார் கதாநாயகனாக நடித்துள்ளார். அனுஸ்ரேயா ராஜன் கதாநாயகியாக நடித்துள்ளார். மேத்யூ வர்கீஸ், வர்ஷினி, வெண்மதி ஆகியோருடன் தயாரிப்பாளர் கார்த்திகேசன் முக்கியமான பாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இப்படத்திற்கு ரகு ஸ்ரவன் குமார் இசையமைத்துள்ளார்.
இப்படத்தின் டிரெய்லர் மற்றும் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. தமிழ்த் திரைப்பட இயக்குநர்கள் சங்கத் தலைவர் இயக்குநர் ஆர். வி உதயகுமார் கலந்து கொண்டு பேசுகையில், “ஒரு நல்ல படத்திற்குக் கதை வேண்டும், நல்ல கதை வேண்டும் என்கிறார்கள். ஆனால் அது தேவையில்லை என்பேன். ஏனென்றால் ஒரு மொக்கை கதையை வைத்துக் கொண்டு நான் சிங்காரவேலன் படத்தை எடுத்தேன். கமல்ஹாசனை வைத்துக்கொண்டு இப்படிக் கதை இல்லாமல் எடுக்க எவ்வளவு துணிச்சல் வேண்டும்? எவ்வளவு லொள்ளு வேண்டும்? சின்ன வயதில் ஜட்டி பனியனோடு காணாமல் போன ஒரு சின்னப் பெண்ணை தேடிக் கண்டுபிடித்து திருமணம் செய்கின்ற கதாநாயகன் என்பது தான் கதை . இதைச் சொன்னால் இப்போது ஒப்புக் கொள்வார்களா? அப்படி எடுத்த படம் தான் அது.
கதைக்கான காட்சிகள் எல்லாம் நாங்கள் பெரிதாக யோசிக்கவே இல்லை. போகிற போக்கில் போகிற வழியில் எழுதியவை தான். இந்தப் படத்தின் விளம்பரத்தின் போது நான் மூளையை கழற்றி வீட்டில் வைத்துவிட்டு வாருங்கள் என்று விளம்பரம் செய்தேன். அப்படி ஒரு நம்ப முடியாத கதை அது. பொள்ளாச்சியில் இருந்து ஒருவன் கருவாடு எடுத்து கொண்டு சென்னைக்கு வருவான். சென்னையில் கிடைக்காத கருவாடா என்று அப்போது யாரும் கேட்கவில்லை. ஏனென்றால் அப்போது அந்த கேள்வி எழாத அளவிற்கு அப்போது ரசிகர்கள் இருந்தார்கள்.
என்னிடம் வாய்ப்பு கேட்டு பலரும் வருவார்கள். எல்லாருக்கும் வாய்ப்பு கொடுக்க முடியாது ஏதோ சிலருக்குக் கொடுப்பதுண்டு. இதனால் சிலர் பிறகு கோபித்துக் கொள்வதுண்டு. அவர்களை எனக்கே தெரியாது மறந்து இருப்பேன் . ஒரு படத்தில் சிலருக்கு மட்டுமே கொடுக்க முடியும் . பலருக்குக் கொடுக்க முடியாத நிலை இருக்கும். அப்படி என்னிடம் வாய்ப்பு கேட்டு ஒருவர் வந்திருக்கிறார். என்னால் முடியவில்லை. அவர் ஒரு நாள் என்னை நேரில் சந்தித்தபோது நான் வாய்ப்பு கேட்டு வந்தேன் நீங்கள் மறுத்து விட்டீர்கள், நான் சினிமாவை விட்டே போய்விட்டேன் என்று கூறினார். அப்போது அவரைச் சந்தித்தபோது அவர் 15 கல்லூரிகளுக்கு முதலாளியாக இருந்தார். நல்ல வேளை அவருக்கு நான் வாய்ப்பு தரவில்லை என்று நினைத்துக் கொண்டேன்.
இந்தப் படத்திற்காக ஒரு குடும்பமாக உழைத்து உள்ளார்கள். இந்தப் படம் ஓடவில்லை என்றாலும் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் அடுத்த படம் எடுக்க வேண்டும். இவர் எங்கள் கோயமுத்தூர்காரர். இவர் அடுத்த படத்திற்கு வாய்ப்பு கொடுத்தால் இந்தப் படத்தை விட ஒரு கோடி குறைத்துக் கொண்டு நான் படம் எடுத்துக் கொடுக்கத் தயார். என்னைச் சந்திப்பவர்கள் எப்படி பீக்கில் இருந்தீர்கள் இப்போது ஏன் படம் எடுப்பதில்லை என்று கேட்பார்கள். நானா முடியவில்லை என்கிறேன், யாரும் தருவதில்லை. நான் ரஜினி, இளையராஜா, ஏவிஎம் என்று எவ்வளவோ உயரத்தைப் பார்த்து விட்டேன். உச்சியில் ஏறி விட்டால், அந்த இடம் சிறியது நீண்ட நேரம் அங்கே இருக்க முடியாது. கீழே இறங்கித்தான் வரவேண்டும். இப்படித்தான் ஒவ்வொரு பெரிய இயக்குநரும் மேலே சென்று இறங்கியதால் தான் அடுத்தடுத்து வந்தவர்கள் மேலே ஏற முடிந்தது.
இப்போது விமர்சனங்கள் என்கிற பெயரில் நிறைய போலிகள் சுற்றுகிறார்கள். அவர்கள் உண்மையான விமர்சகர்களா ? நானும் 40 ஆண்டுகளாக பத்திரிகையாளர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னை உயர்த்தி வைத்தார்கள், இன்றும் என் நண்பர்களாக இருக்கிறார்கள். அவர்கள் அப்படிப் புண்படுத்தும் படியோ, இழிவாகவோ ஒரு நாளும் எழுதியதில்லை. விமர்சனம் எழுதும் போது காழ்ப்புணர்ச்சியைத் தவிர்த்து விடுங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.