இந்திய அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய சட்டமேதை டாக்டர் அம்பேத்கரின் 68வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டு வரும் நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் டாக்டர் அம்பேத்கரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர். அதேபோல் சமூக வலைத்தளங்களிலும் டாக்டர் அம்பேத்கரின் நினைவைப் போற்றும் வகையில் பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் டாக்டர் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார். இது தொடர்பான அவரின் எக்ஸ் வலைதளப் பதிவில், “சட்டம், பொருளாதாரம் ஆகிய துறைகளில் தனக்கிருந்த பேரறிவை, சமூகச் சீர்திருத்தத்துக்கும் அனைத்து மக்களின் நலனுக்குமாகப் பயன்படுத்திய மாமனிதர் அண்ணல் பாபா சாகேப் அம்பேத்கரின் நினைவு தினமான இன்று, ஆதிக்க சக்திகளிடமிருந்து நம்மைக் காத்துக்கொள்வதற்காக அவர் வழங்கிய அரசியல் சாசனத்தை உயர்த்திப் பிடிப்போம். அண்ணலின் நினைவை நெஞ்சில் சுமப்போம்” என்று கூறியிள்ளார்.