தமிழ்த்திரையுலகில் கதையாசிரியர், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் இயங்கி வந்தவர் கலைஞானம். திரைத்துறையில் அரை நூற்றாண்டு அனுபவம் வாய்ந்த இவர், நக்கீரன் ஸ்டூடியோ வாயிலாக 'பொக்கிஷம்' என்ற நிகழ்ச்சி மூலம் தன்னுடைய இளமைக்கால அனுபவங்கள், திரையுலக அனுபவங்கள் மற்றும் சுவாரசியமான சம்பவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், அண்மையில் கலைஞர் பிறந்த தினத்தன்று வழங்கப்பட்ட கலைஞர் எழுதுகோல் விருது குறித்தும் வசனகர்த்தா இளங்கோவன் குறித்தும் அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
”சினிமா 1931இல் தான் ஆரம்பித்தது. நான் 1930லியே பிறந்துவிட்டேன். சினிமா வரலாறு பற்றி பேச சிலரால்தான் முடியும். அந்தச் சிலரில் பலர் இறந்துவிட்டனர். தற்போது நானும் ஒரு சிலர் மட்டும்தான் இருக்கிறோம். சமீபத்தில் கலைஞர் எழுதுகோல் விருது என்று ஒரு விருது வழங்கப்பட்டது. எல்லா எழுத்தாளர்களையும் கவுரவித்ததுபோல சினிமா எழுத்தாளர்களையும் கவுரவித்ததில் எனக்கு ரொம்பவும் மகிழ்ச்சி. அந்த நிகழ்வைப் பார்த்தபோது எனக்கே விருது கொடுத்த மாதிரி இருந்தது. அதேநேரத்தில் முக்கியமான சிலர் விடுபட்ட கவலை எனக்கு உள்ளது.
நான் சிறுவனாக இருந்தபோது பார்த்த படங்களில் சமஸ்கிருத கலப்பு அதிகமாக இருக்கும். நல்ல தமிழில் வசனங்களை எழுத ஆரம்பித்தவர் இளங்கோவன்தான். கண்ணகி, சிவகவி, ஹரிதாஸ் போன்ற பல படங்களுக்கு அழகான தமிழில் எழுதினார். கலைஞர் கருணாநிதிகூட அவரைப் பாராட்டியிருக்கிறார். சினிமாவில் வசனம் எப்படி எழுத வேண்டும் என்பதை இளங்கோவனிடமும், மேடையில் எப்படிப் பேச வேண்டும் என்பதை அண்ணாவிடமும், முற்போக்கான விஷயங்களை எப்படிச் சொல்வது என்பதை பெரியாரிடமும் தெரிந்துகொண்டேன் என ஒரு பேட்டியில்கூட கலைஞர் கூறியிருக்கிறார். கலைஞரால் இப்படி பாராட்டப்பட்ட இளங்கோவன் குடும்பம் இன்று எங்கிருக்கிறது என்று தெரியவில்லை. அவர்களைத் தேடி இந்த விருதை அவரது குடும்பத்தாரிடம் வழங்க வேண்டும். இதை முதல்வர் செய்வார் என்று நம்புகிறேன்”. இவ்வாறு கலைஞானம் தெரிவித்தார்.