காதல், பேராண்மை உள்ளிட்ட பல படங்களில் நடித்துப் பிரபலமான நடிகை சரண்யாவை நக்கீரன் ஸ்டூடியோ சார்பில் சந்தித்தோம். அந்தச் சந்திப்பில் பல்வேறு விஷயங்கள் குறித்து பகிர்ந்து கொண்ட சந்தியா, வயது மூப்பு காரணமாக நடிகைகள் ஒதுக்கப்படுவது குறித்து பகிர்ந்து கொண்டவை பின்வருமாறு...
”சினிமாவில் இருக்கும் பெண் என்றால் அவளைப் பற்றி என்ன வேண்டுமானாலும் பேசலாம், நடிகை என்றால் பொதுச்சொத்து என்று நினைக்கிறார்கள். தப்பான நோக்கம் கொண்ட பெண்கள்தான் சினிமாவில் நடிக்க போவார்கள் என்றெல்லாம்கூட சொல்கிறார்கள். ஆனால், அது உண்மையில்லை. தற்போது நடித்துக்கொண்டிருக்கும் என்னுடைய தோழிகளிடம் பேசும்போது, சினிமா இண்டஸ்ட்ரி ரொம்பவும் பாதுகாப்பான இண்டஸ்ட்ரி என்று சொல்கிறார்கள்.
கொஞ்சம் வயதான காரணத்தால் சினிமாவில் என்னை மாதிரி ஆயிரம் சரண்யா காணாமல் போய்விட்டனர். முதிர்ச்சியில் தான் ஒரு பெண் ரொம்பவும் அழகாக தெரிவாள். ஆனால், அதை யாரும் ரசிப்பதில்லை. 18, 20 வயதில் இருக்கும் பெண்களைவிட 30 வயதிற்கு மேலுள்ள பெண்கள்தான் கதாபாத்திரங்களை உள்வாங்கி சிறப்பாக நடிப்பார்கள். இன்றைக்கு நித்யா மேனன் எப்படி நடிக்கிறார் என்று பாருங்கள். அவருக்கும் 30 வயதிற்கு மேலாகிவிட்டதுதானே? இதை இண்டஸ்ட்ரியில் உள்ளவர்கள் புரிந்துகொண்டால் காணாமல் போன ஆயிரம் சரண்யாக்கும் வாய்ப்புகள் உருவாகும்.
வயது என்பது எல்லோருக்கும் அதிகரித்துக்கொண்டே தான் செல்லும். அதே நேரத்தில் ஆண்களுக்கு வயதெல்லாம் பார்ப்பதில்லை. பெண்களுக்கு மட்டும்தான் வயது கட்டுப்பாடுகள் உள்ளன. முன்பு இருந்ததை விட அது கொஞ்சம் மாறிவருகிறது என்று நினைக்கிறேன்”.