![kaadan](http://image.nakkheeran.in/cdn/farfuture/k-B2h5A5RC7-LYYSKnGplmyoyYkcj1-hAEaP9Ydf_kw/1609930587/sites/default/files/inline-images/107_15.jpg)
பிரபுசாலமன் இயக்கத்தில் நடிகர் ராணா நடிப்பில் உருவாகியுள்ள படம் 'காடன்'. ஈராஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் தயாராகியுள்ளது. மூன்று மொழிகளிலுமே நடிகர் ராணாவே கதாநாயகனாக நடித்துள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததையடுத்து, 2020-ம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதி 'காடன்' வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியானது. கரோனா நெருக்கடி காரணமாக மார்ச் மாதமே இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் திரையரங்குகள் மூடப்பட்டன. இதனால் படத்தின் வெளியீட்டில் சிக்கல் எழுந்தது.
தற்போது ஊரடங்கில் அளிக்கப்படும் தளர்வுகளுக்கு ஏற்ப, திரையரங்குகள் திறக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், காடன் படத்தின் வெளியீட்டுத் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, காடன் திரைப்படம் வரும் மார்ச் 26-ஆம் தேதி இந்தியா முழுவதும் வெளியாகவுள்ளது.
வெளியீட்டிற்குத் திட்டமிட்ட தேதியிலிருந்து ஏறக்குறைய ஓராண்டுகளுக்குப் பிறகு 'காடன்' திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.