நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ‘ரோஸி திரைப்பட விழா’ கடந்த 8ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்றுடன் நிறைவடையும் இந்த விழாவில் நேற்று இயக்குநர்கள் ஹலிதா ஷமீம், ஜியோ பேபி, தரணி ராஜேந்திரன், பி.எஸ் மித்ரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் ரசிகர்களுடன் உரையாடி அவர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தனர்.
அப்போது, ஜியோ பேபி அவர் இயக்கிய தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் குறித்து பேசுகையில், “வித்தியாசமான ஜானரில் படமெடுக்க வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் இருந்து கொண்டே இருக்கும். தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் நேரடியாக ஓடிடியில் வெளியான படம். முதலில் இப்படம் எல்லா பிரதான ஓடிடி தளங்களிலும் நிராகரிக்கப்பட்டது. சாட்டிலைட் சேனல்களிலும் நிராகரிக்கப்பட்டது. தயாரிப்பாளர்கள் மற்றும் படக்குழுவினர் அனைவரும் நிதி நெருக்கடியில் இருந்தோம். எப்படி வெளிக்கொண்டு வருவதென தெரியவில்லை. யாரும் சப்போர்ட் பண்ணவில்லை. அதன் பிறகு நீ ஸ்ட்ரீம் என்ற புதிய தளம் உதவினார்கள். அதனால்தான் படம் வெளிவந்தது. படம் வந்த பிறகு பெரும்பாலும் பெண்களால்தான் இப்படம் பேசுபொருளானது. சமூக வலைத்தளங்களிலும் விவாதத்தை உருவாக்கியது. அதன் பிறகு நிராகரிக்கப்பட்டவர்களிடமிருந்து அழைப்புகள் வந்தது. இந்தப் படத்தை நிராகரித்த அனைவர்களும் ஆண்கள் தான்.
தொடர்ந்து பெண்ணியம் சம்மந்தபட்ட படங்கள்தான் எடுக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசம் காட்ட வேண்டும் அவ்வுளவுதான். அதில் பெண்ணியவாதம் மாதிரியான படங்களும் இருக்கும். சமூகம் எது மாதிரி இருக்கிறதோ அது மாதிரியான படங்கள்தான் வரும். அதை நான் பண்ணவில்லையென்றாலும் வேறு யாராவது பண்ணுவார்கள்” என்றார்.