கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த் நடிப்பில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த படம் 'ஜிகர்தண்டா'. இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. இதில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திகேயன் சந்தானம் மற்றும் கதிரேசன் தயாரிக்கும் இப்படத்தின் டீசர் போன்ற ஒரு முன்னோட்டம் ஏற்கனவே வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.
இப்படம் வருகிற தீபாவளியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என நான்கு மொழிகளில் நவம்பர் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனால் படக்குழு ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. ட்ரைலரில், இப்படம் 1975ல் நடப்பதாக காட்டப்படுகிறது. எஸ்.ஜே சூர்யா, லாரன்ஸை வைத்து படமெடுக்கிறார். அந்த படம் எப்படி உருவாகிறது, எடுக்கும் போது நடக்கும் சுவாரசிய சம்பவங்கள், அதனால் ஏற்படும் விளைவுகள் என ஆக்ஷன், காமெடி கலந்து காட்டப்படுகிறது. இதை பார்க்கையில் ஜிகர்தண்டா முதல் பாகம் போல் திரைக்கதை அமைத்து எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
ட்ரைலரில் வரும், 'கருப்பா இருந்தா கேவலமா...', ''தமிழ் சினிமாவில் முதல் கருப்பு ஹீரோ', 'நல்லவங்கள பத்தி படமெடுத்தா யாரும் பாக்கிறதில்லை...', 'இங்க எவனும் எதையும் புதுசா-லாம் எழுதிட முடியாது, பேனாவை கெட்டியா மட்டும் பிடிச்சிகிட்டா போதும், எழுதப்பட்டது எழுதப்படும்' உள்ளிட்ட வசனங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ட்ரைலர் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.