லெர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகி உலகம் முழுக்க கவனத்தை ஈர்த்த படம் ‘கூழாங்கல்’. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன், நடிகை நயன்தாரா இருவரும் இணைந்து ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலம் வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் பி.எஸ். வினோத் ராஜ் இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்தார். முதலில் வேறு நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுவந்த ‘கூழாங்கல்’ திரைப்படம் பிறகு ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்திற்குக் கை மாற்றப்பட்டது. சர்வதேச திரைப்பட விழாவில் பல விருதுகளை வாங்கியுள்ள இப்படம், இந்தியா சார்பாக ஆஸ்கர் விருது இறுதி போட்டி வரை சென்று பின்பு வெளியியேறியது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், லெர்ன் அண்ட் டெக் புரொடக்ஷன் நிறுவனம் தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளது. அதன்படி, தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து ‘ஜமா’ என்ற படத்தை தயாரித்துள்ளது. அறிமுக இயக்குநர் பாரி இளவழகன் இயக்கியுள்ள படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் அவர் நடித்துள்ளார். மேலும், இப்படத்தில், அம்மு அபிராமி, சேத்தன், காலா குமார், வசந்த் மாரிமுத்து, ஸ்ரீ கிருஷ்ண தயாள், சிவா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இசைஞானி இளையராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தில், கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவாளராகவும், பார்த்தா எம்.ஏ படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
ஆகஸ்ட் 2ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. அந்த டீசரில், தெருக்கூத்தின் போது ஆண் கலைஞர்கள் பெண் வேடமிடும்போது அவர்கள் அனுபவிக்கும் உணர்ச்சிகள், அதனால் இந்தச் சமூகம் கொடுக்கும் எதிர்வினைகள், அதைத் தெருக்கூத்து கலைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை விவரிப்பதாக இந்த டீசரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கூழாங்கல் படத்தை போல், ரசிகர்கள் மத்தியில் பெரும் கவனத்தை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், யதார்த்தமான கதைக்களத்துடன் உருவாகியிருக்கும் இப்படம், சினிமா ரசிகர்களை கவரத் தயாராக இருக்கிறது.