வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரித்திருக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில் விஜய் டி.ஏஜிங் தோற்றத்திலும், ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் மறைந்த விஜயகாந்த்தையும் நடிக்க வைத்துள்ளனர். மேலும் மறைந்த பாடகி பவதாரணியின் குரலை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் ஒரு பாடலுக்கு பயன்படுத்தி பாடவைத்துள்ளனர்.
இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், இன்று (05.09.2024) பிரம்மாண்டமாக வெளியாகியுள்ளது. தமிழகம் முழுவதும் காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் முதல் காட்சி தொடங்கியது. மொத்தம் 750 திரையரங்குகளில் இப்படம் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது. மற்ற தென்னிந்திய மாநிலங்களில் அதிகாலை 4 மணிமுதல் சிறப்பு காட்சி தொடங்கப்பட்டது. திரையரங்குகளில் வழக்கம் போல் விஜய் ரசிகர்கள் பட்டாசு வெடித்து, பேனருக்கு பால் அபிஷேகம் செய்து மேளதாளத்துடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். முதல் நாள் முதல் காட்சியில் ரசிகர்களுடன் இணைந்து வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன், யுவன் ஷங்கர் ராஜா, த்ரிஷா, கீர்த்தி சுரேஷ், அர்ச்சனா கல்பாத்தி, வைபவ் ஆகியோரும் திரையரங்கில் படம் பார்த்துள்ளனர்.
அந்த வகையில் மதுரையில் திரையரங்கிற்கு வாகனத்தில் சென்ற விஜய் ரசிகர்கள் சாலை நடுவே வாகனத்தை நிறுத்திக் கொண்டு ஹாரன் அடித்து ஆரவாரம் செய்தனர். மேலும் மற்ற வாகனங்கள் சாலையில் பயணிக்காதபடி கூச்சலிட்டு சென்றனர். இதனால் அப்பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு அவ்வழியே சென்ற மக்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.