![ferrari](http://image.nakkheeran.in/cdn/farfuture/KLVfbsSpAahzzoavooEQ96BTWMCx1zxnVoOholvN2GI/1602478260/sites/default/files/inline-images/ferrari.jpg)
மலையாள சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவராக இருப்பவர் ஃபகத் பாசில். தன்னுடைய நடிப்பினால் பலரையும் ஈர்த்திருக்கும் ஃபகத், கடைசியாக 'ட்ரான்ஸ்' என்ற படத்தில் நடித்திருந்தார். இந்தப் படத்திலும் அவரது நடிப்பு பலரால் பாரட்டப்பட்டது.
இவரின் மனைவி முன்னணி நடிகையாக இருந்த நஸ்ரியா, திருமணத்திற்கு பின்னர் பெரிதாக படங்களில் நடிக்க ஆர்வம் காட்டவில்லை. சில படங்களில் கெஸ்ட் ரோல் போல நடித்துக் கொடுத்தார். கணவருடன் இணைந்து படங்களை தயாரித்து வருகிறார்.
இந்நிலையில் ஃபகத் மற்றும் நஸ்ரியா இருவரும் விலை உயர்ந்த காரான 'போர்ஷே 911' மாடல் காரை வாங்கியுள்ளனர். இந்த காரின் மதிப்பு சுமார் 2 கோடி இருக்கும். இந்த கார் வாங்கியது குறித்தும், காரை வைத்து இருவரும் போஸ் கொடுக்கும் புகைப்படத்தையும் ஃபகத் இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்தார்.
இது தற்போது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காலத்தில் இவ்வளவு காஸ்ட்லி காரை வாங்கியுள்ளீர்களே, அதை வைத்து கஷ்டப்படும் ஏழைகளுக்கு உதவலாமே போன்ற கமெண்டுகள் அதிகமாக வருகிறது.
இந்நிலையில், இதுபோன்று பதிவிட்டவர்களுக்கு பதிலடி தரும் வகையில் நடிகை அஹானா கிருஷ்ணா பதிவிட்டுள்ளார். அதில், “மக்கள் தங்கள் பொறாமையை அடக்க முடியவில்லையென்றால், அது இப்படித்தான் விஷம் போல வெளியே வந்து விழும். இதுபோன்ற பின்னூட்டங்களைப் பதிவிடுபவர்களுக்கு ஒன்றை நினைவூட்ட விரும்புகிறேன். இங்கே தெளிவாகத் தெரிவது என்னவென்றால் அடுத்தவர் வாழ்வில் ஒரு நன்மை நடக்கும்போது வரும் பொறாமையே அன்றி வேறில்லை. அடுத்தவர்களுக்காக சந்தோஷப்பட முயற்சி செய்யுங்கள். தேவையற்ற சூழல்களில் உங்கள் வாயை மூடிக் கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.