சார்பட்டா பரம்பரை மூலம் கவனம் ஈர்த்த நடிகை துஷாரா விஜயன் சமீபத்தில் ‘அநீதி’ திரைப்படத்தில் நடித்திருந்தார். நக்கீரன் ஸ்டூடியோ சார்பாகச் சந்தித்த போது, நம்முடன் பல்வேறு விசயங்களைப் பகிர்ந்து கொண்டார்.
சார்பட்டா பரம்பரை படத்தில் நான் செய்த மாரியம்மா கேரக்டரை மக்களால் இன்னும் மறக்க முடியவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியான விஷயம். நான் மிகவும் ஆசைப்பட்டு இந்த துறைக்கு வந்திருக்கிறேன். அதனால் எனக்கு அதிகமான கடமைகள் இருக்கின்றன என்று நினைக்கிறேன். நிறைய கதைகள் வருகின்றன. நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பது என்னுடைய எண்ணம். என்னைப் பார்த்து சிலராவது சினிமாவுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
வசந்தபாலன் சார் படத்தில் நடிக்க வேண்டும் என்பது எல்லோருக்குமே உண்டான ஒரு ஆசை. அவருடைய படங்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் இருக்கும். அவர் மிகவும் அமைதியான ஒரு மனிதர். தான் நினைப்பதை உடனே அவர் வெளிப்படுத்த மாட்டார். அதனால் அவரிடம் பாராட்டு வாங்க வேண்டும் என்பது ஒரு ஏக்கமாகவே இருக்கும். இயக்குநர்கள் என்ன நினைக்கிறார்களோ, அதைத் திரையில் சரியாக வெளிப்படுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய நோக்கம். கைதி படத்தில் அர்ஜுன்தாஸ் நடிப்பைப் பார்த்தபோது "எப்படி இவ்வாறு பேசுகிறார்கள்!" என்கிற ஆச்சரியம் ஏற்பட்டது.
அநீதி படத்தில் அர்ஜுன்தாசின் நடிப்பைப் பார்த்து அனைவரும் வியப்பார்கள். நாங்கள் இருவரும் நண்பர்கள் என்பதால் ரொமான்ஸ் என்றாலே எங்களுக்கு சிரிப்பு வந்துவிடும். இந்தப் படத்தில் நடித்த அனைவரோடும் எனக்கு நல்ல நட்பு இருந்தது. ரெனே கேரக்டர் நான் செய்த அழகான ஒரு கேரக்டர். நான் தேர்வு செய்யும் கேரக்டர்கள் பெரும்பாலும் சவாலானவையாகவே அமையும். சினிமாவுக்கு நான் வருவதில் ஆரம்பத்தில் குடும்பத்தினரிடையே எதிர்ப்பு இருந்தது.
அனைத்து எதிர்ப்புகளையும் மீறி தான் இந்த இடத்துக்கு வந்துள்ளேன். வசந்தபாலன் சார் ரொம்பவும் ஸ்ட்ரிக்டானவர் என்று பலர் சொல்கின்றனர். ஆனால் அவர் ஒரு குழந்தை மாதிரி. அதிகம் பேசமாட்டார். ஆனால் பேசும் வார்த்தைகள் சரியாக இருக்கும். சினிமாவை அவர் மிகவும் காதலிக்கிறார். நான் தமிழ் பேசும் நடிகையாக இருப்பதால் எனக்கு வரவேற்பு தான் இங்கு அதிகம் இருந்தது. முதலில் என்னை நிராகரித்தவர்கள் கூட சார்பட்டா பரம்பரை படத்துக்குப் பிறகு என்னை அழைத்துப் பேசுகின்றனர். இதையே என்னுடைய வெற்றியாக நினைக்கிறேன்.