ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் பிரவீன் காந்தி, நக்கீரன் ஸ்டூடியோவுடனான பொக்கிஷம் நிகழ்ச்சியில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். அதில், ஜோடி படத்தில் இடம்பெற்ற 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே...' என்ற பாடல் பதிவின்போது நடந்த சுவாரசிய சம்பவம் குறித்து அவர் பகிர்ந்துகொண்டவை பின்வருமாறு...
"ரொம்பவும் சின்ன வயதிலேயே மிகப்பெரிய சாதனைகளைச் செய்தவர் ஏ.ஆர்.ரஹ்மான் சார். அவருடைய கேரக்டரே நமக்கு ஆச்சர்யத்தை தரும். சுற்றி என்ன நடக்கிறது என்பதை பற்றியெல்லாம் பொருட்படுத்தாமல் தன்னுடைய வேலை என்னவோ அதை மட்டும் செய்வார். என்னுடைய படத்தின் ரெக்கார்டிங்காக நான் பாம்பே சென்றிருந்தேன். அமீர்கான், சேகர் கபூர், ராம்கோபால் வர்மா, மணிரத்னம், சங்கர் சார் என இந்தியா சினிமாவின் மிகப்பெரிய பிரபலங்கள் அங்கு வெளியே காத்திருக்கின்றனர்.
என்னுடைய படத்திற்கான ரெக்கார்டிங் அப்போது சென்று கொண்டிருந்ததால் நான் நேராக உள்ளே சென்றுவிட்டேன். நமக்காக வெளியே இவ்வளவு பேர் காத்திருக்கிறார்கள் என்ற எந்தவித பரபரப்பும் இல்லாமல் ரஹ்மான் சார் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். அவங்க வேலைக்காக அவங்க வந்திருக்காங்க, நம்ம வேலையை நாம சரியாக செய்வோம் என்று கூலாக உட்கார்ந்து கம்போசிங் செய்தார். அதேபோல, பணம், புகழ் எதையும் பொருட்படுத்தமாட்டார்.
பொதுவாக ரஹ்மான் சார் இரவில்தான் வேலை பார்ப்பார். இரவு நேர கம்போசிங்கின்போது அவரோடு எனக்கு நிறைய அனுபவங்கள் உள்ளன. ஜோடி படத்தின்போது ஒரு பொய்யாவது சொல் கண்ணே பாடல் பதிவின்போது ஒரு சுவாரசிய சம்பவம் நடந்தது. வைரமுத்து சார் பாடலுக்கான வரிகளை எழுதிக்கொடுத்துவிட்டு கிளம்பிவிட்டார். பாடகர்கள் வந்துவிட்டனர். முதல் இரு வரிகளில் மட்டும் ரஹ்மான் சாருக்கு திருப்தியில்லை. அந்த இரண்டு வரிகளை மட்டும் விட்டுவிட்டு பாடகர்கள் பாடுகிறார்கள். நானும் ரஹ்மான் சாரும் எப்படி அதை மாத்தலாம் என்று நீண்ட நேரமாக விவாதித்து கொண்டிருந்தோம். நீ என்ன லவ் பண்றேன்னு ஒரு பொய்யாவது சொல்லு... என்பது தான இந்தப் பாட்டில் சொல்ல வர்றீங்க. அதையே முதல் வரியில் வச்சா எப்படினு ரஹ்மான் சார் சொன்னார்.
உடனே இரவு மூன்று மணிக்கு வைரமுத்து சார் வீட்டு லேண்ட் லைனுக்கு போன் செய்தேன். தூக்கத்தில் இருந்த விழித்து, போனை எடுத்தார். சார் லைன் மாத்திருக்கோம்னு சொன்னேன். உங்களுக்கு இந்த போன் லைனையே கட் பண்ணனும்னு நினைக்கிறேன். மணி எத்தனை... இப்ப போன் பண்ணி லைன் மாத்தணும்னு சொல்றீங்க என்றார். பின், அவரிடம் ரஹ்மான் சொன்ன ஐடியாவை சொன்னதும் ஒரு பொய்யாவது சொல் கண்ணே... உன் காதல் நான்தான் என்று... அந்த சொல்லில் உயிர் வாழ்வேன் என்று மாற்றிக்கொடுத்தார். பின், பாடலை ரெக்கார்ட் பண்ணி முடிக்க 5 மணி ஆகிவிட்டது. பிரம்ம முகூர்த்தத்தில் எடுக்கப்பட்ட பாடல்தான் 'ஒரு பொய்யாவது சொல் கண்ணே...' பாடல். அந்த சமயத்தில் ரஹ்மான் சார் போடும் பாடல்களெல்லாம் இந்தியா முழுக்க ஹிட் அடித்தன. அதில், பெரும்பாலான பாடல்கள் இது போன்று அதிகாலை 3 மணியிலிருந்து 5 மணிக்குள் எடுக்கப்பட்ட பாடல்கள்தான்".