
நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக 'சூர்யா 40' எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். சத்யராஜ், தேவதர்ஷினி, சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் சூர்யா இருந்த நிலையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டதால் படப்பிடிப்பின் தொடக்க நாட்களில் சூர்யா கலந்துகொள்ளவில்லை. பின் சூர்யா படப்பிடிப்பில் இணைய, சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் முழுவீச்சில் படமாக்கப்பட்டன. தற்போது, மதுரை சுற்றுவட்டாரப்பகுதிகளில் படப்பிடிப்பு நடத்திவரும் பாண்டிராஜ், அதிகரித்துவரும் கரோனா பரவலைக் கருத்தில் கொண்டு முக்கியமான சண்டைக்காட்சி ஒன்றை படமாக்கும் திட்டத்தை தற்காலிகமாக கைவிடலாம் என முடிவெடுத்துள்ளாராம். அதாவது, குறிப்பிட்ட அந்த சண்டைக்காட்சியை படமாக்க வழக்கமான படப்பிடிப்பிற்கு தேவைப்படும் ஆட்களைவிட கூடுதலாக 100 ஆட்கள் தேவைப்படுமாம். கரோனா அச்சுறுத்தல் நிறைந்த இந்த சூழலில் அதிகப்படியான நபர்களை ஒரே இடத்தில் கூட்டுவதன் ஆபத்தை உணர்ந்து இயக்குநர் பாண்டிராஜ் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. கரோனா நெருக்கடி குறைந்த பிறகு, அந்த சண்டைக்காட்சி திட்டமிட்டபடி படமாக்கப்படவுள்ளதாம்.