கருப்பசாமி குத்தகைக்காரர், வெடிகுண்டு முருகேசன் உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை இயக்கிய இயக்குநர் மூர்த்தி, தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்து நக்கீரன் ஸ்டூடியோவிடம் பகிர்ந்து கொண்டார். அப்போது, கரண் நடிப்பில் வெளியான கருப்பசாமி குத்தகைக்காரர் படத்தின் கதை நடிகர் விஜய்க்காக எழுதப்பட்டது என்று கூறி அதன் பின்னணி குறித்தும் விவரித்தார்.
"'கடல' என்று ஒரு படம் பண்ண முயற்சி செய்துகொண்டிருந்தேன். சண்டைக்காட்சி எதுவும் இல்லாத யூத் லவ்வுடன் கூடிய காமெடி கதையாக அந்தக் கதை இருக்கும். கதை சொல்ல போன இடத்தில் கதை நல்லா இருக்கு. ஆனால், ஃபைட் இல்லையே என்று யோசித்தார்கள். இந்தக் கதையில் ஃபைட் வைக்க முடியாது என்பதால் வேறு கதை செய்தேன். எழுதும்போது சிறியதாக இருந்த அந்தக் கதை முடிக்கும்போது ரொம்பவம் பெரிய கதையாகிவிட்டது. ஏதாவது மாஸ் ஹீரோ பண்ணா பொருத்தமாக இருக்கும் என்பதால் விஜய் சாரிடம் கதை சொல்ல ஆறு மாதங்களாக முயற்சி செய்துகொண்டிருந்தேன். திருப்பாச்சி படத்திற்கு முன்பு இதெல்லாம் நடந்தது. அந்தக் கதைக்கு அப்போது 'பரட்டை' என்று பெயர் வைத்திருந்தேன்.
அப்போது ஒருநாள், இயக்குநர் பாண்டியராஜ் கால் பண்ணி 'கடல' கதையை கரண் சாரிடம் சொல்லுங்கள் என்றார். ஒரு தயாரிப்பாளரிடம் கரண் சாருக்காக அந்தக் கதையை கூறியபோது கதை நல்லா இருக்கு. ஏதாவது புதுமுகத்தை வைத்து பண்ணலாம். கரண் சாருக்கு ஏற்றமாதிரி கதை இருந்தால் சொல்லுங்க என்றார். கரண் சார் படத்தை ஆரம்பிக்கும்போது உங்கள் கதையை புதுமுகத்தை வைத்து ஆரம்பிப்போம் என்று உறுதியும் கொடுத்தார். கரண் சார் படம் ஆரம்பித்தால்தான் நம் படம் ஆரம்பிக்கும் என்பதால் என் நண்பர்களிடம் சென்று கரண் சாருக்கு கதை இருக்கா என்று கேட்டுக்கொண்டு இருந்தேன்.
ஒருநாள் ரூமில் பேசிக்கொண்டு இருக்கையில் அந்த சைக்கிள் ஸ்டாண்ட் பரட்டை கதையை கரண் சாருக்கு சொல்லலாமே என்று பாண்டிராஜ் சொன்னார். அது விஜய் சாருக்காக வைத்திருக்கும் கதை என்பதால் முதலில் நான் யோசித்தேன். பின், என்னுடைய சூழ்நிலை என்னை நெருக்கடிக்கு தள்ளியதால் விஜய் சாருக்காக வைத்திருந்த கதையை அப்படியே கரண் சாரிடம் சொன்னேன். அவருக்கும் கதை பிடித்திருந்தது. பின், அவருக்காக கதையில் பல மாற்றங்கள் செய்தேன். அப்படி ஆரம்பித்த படம்தான் கருப்பசாமி குத்தகைக்காரர்".