புஷ்பா படத்தின் வெற்றிக்குப் பிறகு சுகுமார் - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகியிருக்கும் திரைப்படம் ‘புஷ்பா 2 தி ரூல்’. மைத்ரி முவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபஹத் ஃபாசில் வில்லனாகவும் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் டிக்கெட் முன்பதிவு கட்டணம் தொடங்கி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இப்படத்தின் பாடல்களுக்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். பின்னணி இசையை தமன் மற்றும் சாம் சி.எஸ் கவனித்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் இருந்து முதல் பாடலாக ஸ்ரீ லீலா நடனமாடிய ‘கிஸ்ஸிக்’ பாடல் சமீபத்தில் வெளியாகியிருந்தது. இது கலவையான விமர்சனத்தை பெற்றது. இதனைத் தொடர்ந்து படத்தின் இரண்டாவது பாடலாக ‘பீலிங்க்ஸ்’ பாடல் நேற்று வெளியாகியிருந்தது.
இந்தப் பாடலை செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி பாடியுள்ளனர். மேலும் விவேகா வரிகள் எழுதியுள்ளார். முன்னதாக புஷ்பா முதல் பாகத்தில் இவர் எழுதிய‘ஊ சொல்றியா...’ பாடல் வரிகள் சர்ச்சைக்கு உள்ளானது. இதையடுத்து இப்பாடலின் வரிகளும் தற்போது ஆபாசமாக இருப்பதாக சர்ச்சையாகியுள்ளது. மேலும் ராஷ்மிகாவின் நடன அசைவுகள் வினோதமாக இருப்பதாகவும் அதை கிண்டல் செய்து விமர்சித்தும் சமூக வலைதளங்களில் பதிவுகள் பறக்கின்றன.