தமிழில் மூத்த இயக்குநராக வலம் வந்தவர் சங்கரன். 1974 ஆம் ஆண்டு வெளியான ‘ஒன்னே ஒன்னு கண்ணே கண்ணு’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான இவர், தொடர்ந்து தேன் சிந்துதே வானம் , துர்கா தேவி, தூண்டில் மீன் உள்ளிட்ட மொத்தம் 8 படங்களை இயக்கியுள்ளார். மேலும் நடிகராக விஜயகாந்த்தின் சின்ன கவுண்டர், கமலின் சதிலீலாவதி, மணிரத்னத்தின் மௌன ராகம், அஜித்தின் அமராவதி, காதல் கோட்டை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் 92வயதான அவர் வயது மூப்பின் காரணமாக மறைந்துள்ளார். இவரது மறைவு தமிழ் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் திரையுலகத்தை சார்ந்த பலரும் தற்போது இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பாரதிராஜ தனது எக்ஸ் தள பக்கத்தில், “எனது ஆசிரியர் இயக்குநர் ரா.சங்கரன் சாரின் மறைவு வேதனை அளிக்கிறது. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.