Skip to main content

விக்ரம் முதல் சச்சின் வரை...! பரவை முனியம்மா, மறக்க முடியுமா?

Published on 29/03/2020 | Edited on 30/03/2020

2003இல் பொங்கல் வெளியீடாக, பொங்கல் தினத்துக்கு சில நாட்கள் முன்னரே வெளியானது 'தூள்'. விக்ரம் - தரணி என்ற 'தில்' கூட்டணி மீண்டும் இணைந்து, அனைத்து சுவைகளும் நிறைந்த முழு கமர்சியல் படமாக உருவாக்கியிருந்தனர். ஆரம்பம் முதல் மின்னல் வேகத்தில் நகரும் படம். சண்டை ஒவ்வொன்றும் அதிரும். அதன் உச்சகட்டமாகப் படத்தின் முக்கியமான இடத்தில், பாட்டி பரவை முனியம்மாவை வில்லன்கள் துரத்த, 'எங்கே கொன்று விடுவார்களோ' என்ற பதைபதைப்புடன் ரசிகர்கள் பார்க்க, ஓடும் பரவை முனியம்மா திடீரென நின்று திரும்பி வருவார். "வாங்கடீ வாங்க... என் சிங்கத்தை கேளுங்கடா" என்று சொல்ல விக்ரம் கம்பீரமாக வந்து ஆக்ரோஷமாக அடிக்க, 'மதுர வீரன்தானே...' என்று பரவை முனியம்மா பாடிய அந்தப் பாடல் திரையரங்குகளில் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டது. அப்போதைய ரசிகர்களின் 'கூஸ்பம்ப் மொமண்ட்'டாக அது அமைந்தது. பரவை முனியம்மாவின் குரலில் அந்தப் பாடலும் அதோடு நடக்கும் சண்டைக்காட்சியும் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.
 

paravai muniyamma



'தூள்' படமும் முக்கியமாக அந்தப் பாடலும் பெற்ற வெற்றியில் தமிழகத்தின் செல்லப் பாட்டியானார் முனியம்மா. அதற்கு முன்பே பல ஆண்டுகளாக மதுரை சுற்றுவட்டாரங்களில் அவரது நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் பிரபலம். அவரது கேஸட்டுகளின் விற்பனை அமோகம். திருவிழாக்களில் ஒலித்த அவரது குரல், 'தூள்' மூலம் திரையரங்குகளில் ஒலித்தது. இயக்குனர் தரணி, தன் படங்களில் நாட்டுப்புற பாடகர்களைப் பயன்படுத்துவதை வழக்கமாக வைத்திருந்தார். 'எதிரும் புதிரும்' படத்தில் புஷ்பவனம் குப்புசாமி பாடிய 'தொட்டு தொட்டு பேசும் சுல்தானா' பாடல் பயங்கர ஹிட். 'தில்' படத்தில் மாணிக்க விநாயகம் பாடிய 'கண்ணுக்குள்ள...' பாடலும் ஹிட். அடுத்ததாக பெருவெற்றியைப் பெற்றது 'பரவை' முனியம்மா 'தூள்' படத்தில் பாடிய 'மதுர வீரன்தானே'. இந்த மூன்று படங்களுக்குமே இசையமைத்தவர் வித்யாசாகர். மாணிக்கவிநாயகம், பரவை முனியம்மா இருவருமே பாடகர்கள் என்பதைத் தாண்டி நடிகர்களாகவும் பல படங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றனர்.

 

sachin



'மதுர வீரன்தானே' பாடல் பெற்ற வெற்றி மிகப்பெரியது. ஒவ்வொரு திருமணம், திருவிழா என அந்த ஆண்டு தமிழகத்தின் கொண்டாட்டமாக அந்தப் பாடல் அமைந்தது. அதன் உச்சமாக, 2003ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் அதிரடியாக ஆடி கிரிக்கெட் ரசிகர்களைக் குதூகலத்தில் வைத்திருந்த சச்சினின் ஆட்டத்துக்கு ஒரு ட்ரிபியூட்டாக, அவர் ஆடிய வீடியோவுடன் இந்தப் பாடலை இணைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. கிரிக்கெட் ரசிகர்களும் சினிமா ரசிகர்களும் கொண்டாடினர். இப்படி ஒரு பாடலிலேயே மிகப்பெரிய புகழ் பெற்ற பரவை முனியம்மா, பல படங்களில் நடித்தார். பல நாடுகளுக்கும் பயணித்து நிகழ்ச்சிகளில் பாடினார். அஜித், விக்ரம், சிம்பு, தனுஷ் என பல முக்கிய நாயகர்களுடன் நடித்துள்ளார். தனது அறுபது வயதுக்கு மேல் இவ்வளவு ஆக்டிவ்வாக இருந்த பரவை முனியம்மா, சில ஆண்டுகளாகவே உடல் நலக் குறைவால் அவதிப்பட்டார். வயதின் காரணமாக மறைந்துவிட்டார். ஆனால், இன்று கேட்டாலும் நம்மை தாளம் போடவைக்கிறது 'மதுர  வீரன்தானே' எனப் பாடிய அவரது குரல்.                   

 

                           
 

சார்ந்த செய்திகள்