Skip to main content

அமைச்சர் உதயநிதிக்கு தனுஷ் வாழ்த்து 

Published on 29/08/2024 | Edited on 29/08/2024
dhanush wishes udhayanidhi regards f4 car race

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தனியார் அமைப்பு ஒன்றின் சார்பில் சென்னையில் ஆகஸ்ட் 31 மற்றும் செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்தப்படவுள்ளது. கார் பந்தயத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கார் பந்தயம் நடத்த தடை விதிக்கக்கோரி தமிழக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ். பிரசாத் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் ராகவாச்சாரியும் தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமனும் ஆஜராகினார். இவர்களின் வாதங்களை பதிவு செய்த நீதிபதிகள், போக்குவரத்துக்கு எந்தவொரு இடையூறும் இருக்கக் கூடாது என்றும் கார் பந்தயம் நடத்துவது தொடர்பாகச் சர்வதேச ஆட்டோமொபைல் அமைப்பிடம் பெற்ற சான்றிதழை சமர்பிக்க கோரியும் அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். 

அதைத்தொடர்ந்து விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், அரசு குற்றவியல் கூடுதல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி,  “எப்.ஐ.ஏ. சான்றிதழ், கார் பந்தயம் தொடங்கும்  மூன்று மணி நேரத்திற்குள் தான் கிடைக்கும்” எனத் தெரிவித்தார். இதனைக் கேட்ட நீதிபதிகள், சனிக்கிழமை(ஆகஸ்ட் 31) 12 மணிக்குள் எப்.ஐ.ஏ.  சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்து, சென்னையில் ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த எந்த தடையும் இல்லை எனத் தீர்பளித்தனர். 

இதைத் தொடர்ந்து விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு நடிகர் தனுஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பான தனுஷின் எக்ஸ் தள பதிவில், ஃபார்முலா4 கார் பந்தயம் நடக்கவிருப்பது அற்புதமான முன்னெடுப்பு என்றும் இது சென்னையின் அந்தஸ்தை உயர்த்தும் எனவும் குறிப்பிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

சார்ந்த செய்திகள்