தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் பல்வேறு சங்கங்கள் இணைந்து, கடந்த ஜூலையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இக்கூட்டத்தில் பல்வேறு அதிரடி தீர்மானங்களை நிறைவேற்றினர். அதில் ஒன்றாக தனுஷ் பல தயாரிப்பாளர்களிடம் முன்பணம் பெற்றிருக்கும் சூழ்நிலையில் இனிவரும் காலங்களில் தயாரிப்பாளர்கள், தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படங்களின் பணிகளைத் துவங்குவதற்கு முன்பாக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தைக் கலந்தாலோசிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து தென்னிந்திய நடிகர் சங்கம், தனுஷ் மீது தயாரிப்பாளர்கள் சங்கம் இதுவரை எந்த புகாரும் அளிக்கவில்லை என்றும் எங்களிடம் தயாரிப்பாளர்கள் சங்கம் கலந்தாலோசிக்காமல் தீர்மானம் நிறைவேற்றியிருப்பது கண்டனத்துக்குரியது என்றும் அறிக்கை வெளியிட்டனர். இதையடுத்து தனுஷ் விவகாரம் தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்க பொருளாளர் கார்த்தி, இதற்கு முன் நடிகர் மற்றும் தயாரிப்பாளர்கள் சார்ந்த பிரச்சனைகளை எப்போது இருதரப்பினரும் குழுக்கள் ஆரம்பித்து நிர்வாக முடிவுகளை எடுத்து வந்தோம் என்றும் ஆனால் தயாரிப்பாளர் சங்கத்தின் தன்னிச்சையான முடிவு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தார். அதைத்தொடர்ந்து சமீபத்தில் நடந்த தென்னிந்திய பொதுக்குழு கூட்டத்தின் போது, பத்திரிக்கையாளர்கள் சந்தித்த கார்த்தி, தனுஷ் விவகாரம் தொடர்பான பிரச்சனைக்கு தீர்வை நடிகர் சங்கம் தரப்பிலிருந்து தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் தெரிவித்ததாக பேசியிருந்தார்.
இந்நிலையில் சென்னை ஆயிரம் விளக்கிலுள்ள தயாரிப்பாளர்கள் சங்க கட்டிடத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைமையில் நடப்பு தயாரிப்பாளர் மற்றும் பெப்சி ஆகிய சங்கங்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தனுஷ் இரண்டு படங்களுக்கு முன்பணம் பெற்றுக் கொண்டு கால்ஷீட் தரவில்லை என்ற புகார் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. பின்பு இறுதியாக இரண்டு தயாரிப்பாளர்களில் ஒரு தயாரிப்பாளருக்கு கால்ஷீட் தருவதாகவும் மற்றொரு தயாரிப்பாளருக்கு வட்டியுடன் பணத்தை திருப்பி தருவதாகவும் தனுஷ் தரப்பில் ஒப்புதல் வழங்கப்பட்டது. இதையடுத்து அவரின் படங்களுக்கு தயாரிப்பாளர் சங்கம் ஒத்துழைப்பு கொடுக்க முடிவெடுத்துள்ளது.