உலக குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு தொழில் துறை சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், தொழிலாளர் நலத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், நடிகை தேவயானி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
அந்நிகழ்ச்சியில் பேசிய தேவயானி, "ஒரு குழந்தை படிக்கவில்லை என்றால் கிட்டத்தட்ட 40 வருஷம் வீணாகப் போகின்றது. அது அடுத்த தலைமுறைக்கு மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது. அதனால் ஒவ்வொரு குழந்தையும் படிக்க வேண்டும். அதற்கான சகல வசதியும் கொடுத்திருக்காங்க. அதை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். புத்தகம் படியுங்கள். இந்த வயசில் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொள்ளுங்கள். ஃபோனில் படிப்பதற்கு எதுவும் கிடையாது. அதை ஒழிப்பதற்கு ஒரு நாள் வரும்" என்றார். உடனே திரும்பி அமைச்சரை பார்த்து, "இதை ஒழிப்பதற்கு ஒரு நாள் வரணும் அமைச்சர் சார்" என்று கோரிக்கை வைத்தார்.
மேலும் பேசிய அவர், "24 மணி நேரம் ஒரு குழந்தை ஃபோனை பார்த்து கொண்டிருந்தால் அது எவ்வளவு பாதிப்பை உண்டாக்குகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை சரி செய்ய வேண்டும். குழந்தைகள் ஃபோனில் படிக்கிறார்கள். அது உண்மை தான். அவர்கள் ஃபோனில் மட்டும் தான் விளையாடுகிறார்கள். வெளியில் விளையாடுவதே இல்லை. இதையெல்லாம் குறைக்க வேண்டும். வாழ்க்கையில் முன்னேறுவதற்கு என்ன வழி இருக்கிறதோ அதைத்தான் பள்ளிக்கூடம் சொல்லிக் கொடுக்க வேண்டும். டிஜிட்டல் விஷயத்தை கம்மி பண்ணி அவர்கள் கவனத்தை படிப்பில் செலுத்தும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். எந்த தொழிலுக்கும் அனுப்பக்கூடாது. இது படிக்கிற வயசு. விளையாடுகிற வயசு" எனப் பேசினார்.