உலக புகழ்பெற்ற நடிகர் ஜாக்கி சான் உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தடுக்க மாற்று மருந்து கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு தொகையை அறிவித்திருக்கிறார்.
சீனாவிலிருந்து பரவ தொடங்கிய கரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பல நாடுகளில் பரவியுள்ளது. சீனாவில் சுமார் 23,000 பேருக்கு மேல் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஆயிரத்திற்கும் மேலானோர் இந்த நோயினால் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவிலிருந்து இந்தியா வந்தடைந்த மாணவர்களில் மூன்று பேருக்கு கரோனா வைரஸ் இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில் கரோனாவிற்கு மாற்று மருந்து கண்டுபிடிப்பதில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
கரோனா வைரஸ் பாதிப்பால் ஜாக்கிசானின் வேன்குவார்ட் படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், “வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வர அறிவியலும் தொழிநுட்பமும்தான் நமக்கு கைகொடுக்கும் என்று நம்புகிறேன். என்னை போல பலரும் அப்படிதான் நம்புகிறார்கள். வெகு விரைவில் வைரஸிற்கான மாற்று மருந்து கண்டுபிடிக்கப்படும் என நம்புவோம்.
தற்போது எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. எந்த தனிநபரோ அல்லது ஒரு நிறுவனமோ கரோனா வைரஸிற்கு மாற்று மருந்து கண்டுபிடித்தால் பிரச்சனையில்லை, அவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒரு மில்லியன் யுவான் பரிசாக கொடுக்க நினைக்கிறேன்.
இந்த விஷயம் பணத்தை பற்றியது அல்ல. ஏன் என்றால் பரபரப்பாக இருந்த வீதிகள் தற்போது காலியாக இருப்பதையும், வாழ்க்கையை அனுபவிக்க வேண்டிய என் நண்பர்கள் ஒரு வைரஸை எதிர்த்து போராடுவது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று ஜாக்கி சான் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.