Skip to main content

தொடங்கியது சர்ச்சை - விஜய் பாடலுக்கு எதிராகப் புகார் 

Published on 15/04/2024 | Edited on 16/04/2024
complaint against vijay the goat song whistle podu lyrics

விஜய் நடிப்பில், இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’. விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர். கடந்த புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் ஆகிய போஸ்டர்கள் வெளியாகி வைரலானது. 

இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை, தாய்லாந்து, புதுச்சேரி, கேரளா, உள்ளிட்ட இடங்களில் நடந்தது. அதனைத் தொடர்ந்து தற்போது ரஷ்யாவில் நடந்து வருகிறது. செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதிர்த்தியை முன்னிட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘விசில் போடு’ பாடலின் லிரிக் வீடியோ நேற்று வெளியானது. விஜய் பாடியுள்ள இப்பாடல் யூட்யூபில் தற்போது வரை 20 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து ட்ரெண்டிங்கில் நமபர் 1 இடத்தில் இருக்கிறது. விஜய்யுடன் இணைந்து இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா, வெங்கட் பிரபு, பிரேம்ஜி ஆகியோர் பாடியுள்ளனர். ராஜு சுந்தரம் நடனம் அமைத்திருக்க மதன் கார்க்கி பாடல் வரிகளை எழுதியுள்ளார். இந்த பாடல், படத்தில் ஒரு குழுவாக பணியாற்றும் விஜய், பிரபு தேவா, பிரஷாந்த், அஜ்மல் ஆகியோர் ஜாலியாக ஒரு பார்ட்டி செய்யும் சூழலை விவரிக்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும் பாடலில் ‘கேம்பைன தான் தொறக்கட்டுமா, மைக்க கையில் எடுக்கட்டுமா’ என விஜய்யின் அரசியல் டச்சும், ‘நண்பா நண்பி விசில் போடு’ என விஜய்யின் ஃபேவரட் டயலாக்குகளும் இடம்பெறுகின்றன.  

இந்த நிலையில் இப்பாடலின் வரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை டி.ஜி.பி அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் புகாரளிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த புகார் மனு, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த மனுவில், “நடிகர் விஜய் தொடர்ந்து பிரச்சனையை தூண்டுதல், போதை பொருட்களை ஆதரிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறார். லியோ திரைப்படத்தில் கூட போதை பொருளை ஆதரித்து பாடல் வெளியிட்டார் என்பதையும் இங்கு சுட்டி காட்டுகிறேன். தற்போது அனைத்து இணையதளங்கள் வழியாக வெளியாகியுள்ள விஜய் தனது சொந்தக் குரலில் பாடிய பாடல் வரிகள் நாட்டில் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலும், மதுப்பழக்கத்தை ஆதரிக்கும் வகையிலும் பாடியுள்ளார். குறிப்பாக பார்ட்டி ஒன்னு தொடங்கட்டுமா? என்ற வரியில் தணிக்கை குழு வாரிய சட்டத்தின்படி போதைப் பொருள் மற்றும் மதுபான பாட்டில்கள் காட்சிகளாக இடம் பெறும் இடங்களில் விழிப்புணர்வு வாசகம் வைக்க வேண்டும். ஆனால் நடிகர் விஜய் அதை வைக்கவில்லை.!

அதிரடி கெளப்பட்டுமா? சேம்பைன தான் தொறக்கட்டுமா? இப்படி தொடர்ந்து தமிழ் சினிமாவில் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் ரவுடியிசத்தை ஆதரிக்கும் வகையில் அதிரடி காட்டட்டுமா என்ற வரியும் இடம்பெற்றுள்ளது. மைக்கை கையில் எடுக்கட்டுமா? தமிழக அரசியலில் சில தலைவர்களை சுட்டிக்காட்டும் வகையில் குறிப்பாக சீமான், கமல் மற்றும் மன்சூர் அலிகான் போன்ற நடிகர்களை சுட்டிக்காட்டும் வகையில் மைக்கை கையில் எடுக்கட்டுமா என்ற வாசகத்தை, ஒருவர் மனதை புண்படுத்தும் வகையிலும் மற்றும் வார்த்தைகளாலும் துன்புறுத்தும் வகையிலும் உள்ளது. இடி இடிச்சா என் வாய்ஸ் தான் வெடி வெடிச்சா என் பாய்ஸ், விஜய் மீது யார் புகார் கொடுத்தாலும் அவர்கள் நற்பணி இயக்கத்தை வைத்து சம்பந்தப்பட்ட நபர்களை மிரட்டும் தொணியில் வெடிச்சா என் பாய்ஸ் தான் என்ற வார்த்தையால் மிரட்டுகிறார் விஜய். குடிமக்கள் தான் நம் கூட்டணி, விஜய் மணிப்பூர் கலவரத்தில் குரல் கொடுக்கவில்லை. குறிப்பாக நாட்டில் எது நடந்தாலும் கண்டும் காணாமல் தன் படத்திற்காக வாயைத் திறக்கும் நடிகராக விஜய் உள்ளார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே. ரத்தம் பத்தட்டும் விசில் போடு ஹே நண்பா நண்பி விசில் போடு என்று இளைஞர்கள் மத்தியில் ரத்த வெறியை தூண்டும் வகையில் விஜய் செயல்பட்டு வருகிறார்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

கடந்த ஆண்டு விஜய்யின் லியோ படத்தில் இடம்பெற்ற ‘நான் ரெடி தான்’ பாடல் லிரிக் வீடியோ வெளியான போது, விஜய் புகைபிடித்துக் கொண்டே பாடல் முழுவதும் நடனமாடியது விமர்சனத்துக்குள்ளானது. மேலும் பாடல் வரிகளில் மதுபானம் போன்றவை இடம்பெற்றிருப்பதாலும் பல தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின. இந்த விவகாரம் தொடர்பாக விஜய் மீது போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல் ஆணையரிடம் ஆன்லைன் வாயிலாகப் புகார் அளிக்க பின்பு அப்பாடலில் 'புகை பிடித்தல் புற்றுநோய் உண்டாக்கும், உயிரைக் கொல்லும்' என்ற எச்சரிக்கை வாசகம் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து விஜய்யின் படங்கள், தொடர்ந்து ஏதோ ஒரு விதத்தில் சர்ச்சையில் சிக்கி வரும் நிலையில் தற்போது தி கோட் படத்திற்கும் அது தொடர்கிறது. 

சார்ந்த செய்திகள்