90-களில் பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான ரஞ்சித், நீண்ட இடைவெளிக்குப் பிறகு இயக்கி நடித்துள்ள படம் கவுண்டம்பாளையம். கடந்த 9ஆம் தேதி இப்படம் வெளியான நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த ரஞ்சித், ஆணவக் கொலைக் குறித்த கேள்விக்கு, அது அக்கறை தான், வன்முறை அல்ல என்றார். இது சர்ச்சையான நிலையில் கடும் கண்டனங்களும் விமர்சனங்களும் எழுந்தது. பின்பு சில தினங்கள் கழித்து, “நான் சொல்ல வந்த கருத்து வேறு. ஆனால் சமூகத்தில் நான் ஆணவக் கொலைக்கு ஆதரவானவன் எனச் சித்தரித்துவிட்டார்கள். உலகத்தில் வன்முறை தீர்வாகாது. நான் ஆணவக் கொலைக்கு ஆதரவானவன் அல்ல” என்றார்.
இவரது பேச்சுக்கு, வி.சி.க தலைவர் திருமாவளவன், “ஆணவக் கொலையை வன்முறையல்ல என்று சொல்லுவது அரசியல் அறியாமையாக இருக்க வேண்டும் அல்லது வணிக நோக்கமாக இருக்க வேண்டும். ஆணவக் கொலை என்ற பெயரில் திரைப்படமெடுத்து சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகப் பேசுவது, கருத்துகளைப் பரப்புவது, நாட்டுக்கு நல்லதல்ல. அவர்கள் இது போன்ற கருத்துகளைப் பேசுவது கவலையளிக்கிறது” என்றார்.
இந்த நிலையில் ரஞ்சித் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் வி.சி.க. சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த புகாரை வி.சி.க. மாநில துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு கொடுத்துள்ள நிலையில், “திரைப்பட நடிகர் ரஞ்சித் இயக்கி நடித்துள்ள கவுண்டம்பாளையம் திரைப்படத்தின் ட்ரைலரில் திட்டமிட்டு சமூக அமைதியைச் சீர்குலைக்கும் வகையிலும், விசிக கட்சியை அவமானப்படுத்தும் நோக்கிலும் பல்வேறு காட்சிகளை வைத்திருந்தார். இது தொடர்பாக டிஜிபி அலுவலகம் மற்றும் தணிக்கை குழுவிடம் நாங்கள் புகார் கொடுத்த பின் அந்த காட்சிகள் நீக்கப்பட்டு இந்த திரைப்படம் வெளியானது.
இந்த நிலையில், கடந்த 10ஆம் தேதி நடிகர் ரஞ்சித் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஆணவப் படுகொலைகளை நியாயப்படுத்தும் வகையிலும், அதை ஊக்குவிக்கிற வகையிலும், அது தவறில்லை என்கிற வகையிலும் பொதுவெளியில் கருத்துகளைத் தெரிவித்தார். குறிப்பாக, ஆணவக் கொலை தொடர்பாகத் தமிழகத்தில் தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும் என நாங்கள் வலியுறுத்தி வரும் நிலையில், அதனை நியாயப்படுத்தும் விதமாக நடிகர் ரஞ்சித் பேசி இருப்பது மிகவும் மோசமான செயல். இரு சமூகங்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்த வேண்டும். ஆணவக் கொலைகளை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு திட்டமிட்டு இவ்வாறு மோசமாகக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.
இது அவருடைய திட்டமிட்ட சமூகத்தைப் பிளவுபடுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தைக் காட்டுகிறது. படுகொலைகளை ஆதரிக்கும் அவருடைய வன்முறை எண்ணத்தையும் வெளிப்படுத்துகிறது. சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் பேசி வரும் நடிகர் ரஞ்சித் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.