சமீபத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்று வரும் ஆகஸ்ட் 16, 1947 திரைப்படத்தில் நடித்த நடிகர் புகழ் உடன் ஒரு சிறப்பு நேர்காணல்.
1947 படத்தில் மிகச் சிறப்பான ஒரு கேரக்டரை இயக்குநர் எனக்கு வழங்கியிருக்கிறார். பல தரப்பினரிடமிருந்தும் எனக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் இருக்கின்றன. கௌதம் கார்த்திக் எனக்கு நல்ல குடும்ப நண்பராக அமைந்தது இறைவன் கொடுத்த வரம். மக்களின் மகிழ்ச்சி தான் என்னுடைய பிரதான நோக்கம். ரத்தத்தைப் பார்த்தால் மக்கள் கைதட்டும் சத்தத்தை ரசிக்க முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் என்னை ரசிக்கின்றனர். சென்னைக்கு வந்த புதிதில் மிகுந்த சிரமப்பட்டிருக்கிறேன். வெல்டிங் கடையில் வேலை செய்திருக்கிறேன். சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டிருக்கிறேன். மக்கள் நம் மீது செலுத்தும் அன்புக்காக எதையும் செய்யலாம்.
இன்று நான் இந்த நிலைமையில் இருப்பதற்கு முக்கியமான காரணம் வடிவேல் பாலாஜி அண்ணன் தான். இப்போது அவர் நம்மோடு இல்லை என்றாலும், மக்கள் மனதில் எப்போதும் அவர் வாழ்ந்து கொண்டிருப்பார். எனக்குள் அவர் எப்போதும் இருக்கிறார்.
சூர்யா சார் மிகவும் அன்பான மனிதர். குடும்பத்தோடு நேரம் செலவிட வேண்டும் என்கிற ஆலோசனையை எனக்கு அவர் வழங்கினார். மனைவிக்காக வாழ வேண்டும் என்று கூறினார். இப்படி ஒரு மனிதரா என்று ஆச்சரியப்பட்டேன். என் நடிப்பின் மீது எதிர்மறையான விமர்சனங்களும் வந்துள்ளன. அனைத்தையும் ஏற்றுக்கொண்டு சரி செய்து கொள்கிறேன். மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது மட்டும்தான் என்னுடைய நோக்கம். அதை நான் இறுதி வரை செய்வேன்.