விஜய், தனது மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றியுள்ளார். தமிழக வெற்றி கழகம் என தனது கட்சிக்கு பெயர் வைத்துள்ளதாக அறிவித்த விஜய், அதை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்துள்ளார். இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட விஜய், ஏற்கனவே ஒப்புக்கொண்டுள்ள ஒரு படத்தில் நடித்துவிட்டு முழுமையாக கட்சி பணிகளை கவனிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார். இப்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் கட்சியின் பெயரை அறிவித்ததைத் தொடர்ந்து, தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்சி நிர்வாகிகள் கேக் வெட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். மேலும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர். இது ஒரு புறம் இருக்க, விஜய்க்கு அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் எக்ஸ் தளத்தில் பாடலாசிரியர் விவேக், “வாழ்த்துகள் பேரன்புமிக்க விஜய் சார். தவெக தமிழ் மக்கள் கையில் வாளாகவும், கேடயமாகவும் திகழும் என்ற நம்பிக்கையோடு, என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ஷாந்தனு, “நீங்கள் பெரிய உயரங்களை எட்டவும், ஒரு தலைவராக நீங்கள் தமிழ்நாட்டிற்கு என்ன செய்ய விரும்புகிறீர்களோ, அதைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்” என பதிவிட்டுள்ளார்.
இயக்குநர் மற்றும் நடிகரான சேரன் தனது எக்ஸ் பக்கத்தில், “உங்கள் முயற்சி நல்ல எண்ணங்களுடைய சிந்தனையாளர்களின் துணையால் அவர்களின் திட்டமிடலால் எண்ணற்ற சிந்தனையாளர்களின் உழைப்பால் உயரட்டும், வாழ்த்துகள்.. ‘எண்ணித்துணிக கருமம்’ என்பது போல் இதனை இதனால் இவன் செய்து முடிப்பான் என்றாய்ந்து என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்” என்றுள்ளார். மேலும் அட்லீ, வரலக்ஷ்மி சரத்குமார், ஹரிஷ் கல்யாண், அனிருத், ரத்னகுமார், கவின், சனம் ஷெட்டி உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளனர்.