Skip to main content

"என்னய்யா இப்படி பண்ற, தூரப் போய் நில்லுயா" - இளையராஜா ரெக்கார்டிங்கில் செல் முருகனை கலாய்த்த விவேக்

Published on 18/04/2022 | Edited on 18/04/2022

 

cell murugan talk about vivek

 

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக இருந்துவந்த சின்ன கலைவாணர் விவேக்கின் முதலாம் ஆண்டு நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் விவேக்கின் நெருங்கிய நண்பரும், நடிகருமான செல் முருகன் விவேக்கின் கனவான 'க்ரீன் கலாம்' எனும் ஒரு கோடி மரம் நடும் திட்டத்தை தொடரும் வகையில் ’விவேக் க்ரீன் கலாம்’ என்ற பெயரில் மரம் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இந்த நிகழ்வில் பேசிய செல் முருகன் விவேக்கிற்கும் தனக்கும் இருந்த நட்பு குறித்த பல நெகிழ்ச்சியான நினைவுகளை பகிர்ந்து கொண்டார். 

 

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் அவர்களுடனான விவேக்கின் நேர்காணல் பற்றி பேசிய செல் முருகன், "விவேக் சார் கிட்ட இன்டர்வியூக்கு நிறைய பேர் கேக்குறாங்க பண்ணலாமான்னு கேட்டேன், ஆனால் நிறைய முறை இன்டெர்வியூ கொடுத்தாச்சு, புதுசா யாராவது பாரு முருகான்னு சொன்னார். அப்போது தான் ஒரு நியூஸ் பேப்பர்ல பார்த்தேன். விவேக் சாரையும், அப்துல் கலாம் சாரையும் வைத்து கேலிச்சித்திரம் பண்ணியிருந்தாங்க. அப்பதான் எனக்கு தோணுச்சு; அப்துல் கலாம் சாரையே இன்டெர்வியூ எடுக்கலாம்னு. அதை விவேக் சார் கிட்ட சொன்னேன். யோவ் என்னய்யா சொல்ற, அவரை எப்படியா நாம இன்டெர்வியூ எடுக்கிறதுன்னு கேட்டார். சும்மா கேட்டு பாக்கலாமுன்னு சொன்னேன். அவரும் ஓகே சொல்லிட்டாரு. அதுக்கப்புறம் அப்துல் கலாம் சாரும் ஓகே சொல்லிட்டாரு. ஆனால் இன்டெர்வியூ டெல்லிலதான்னு சொல்லிட்டாங்க. நாங்க டெல்லிக்கு போயிட்டோம். விவேக் சார் எடுத்து வச்ச கேள்வியெல்லாம் அப்துல் கலாம் சார் கிட்ட தரேன்; நீங்க அதுக்கு ரெடியா ஆயிடுங்கன்னு சொன்னார். ஆனால், கலாம் சார் அதெல்லாம் வேணாம் சார். அது நல்லா இருக்காது நீங்க கேள்வியை என்னோட பி ஏ கிட்ட கொடுத்துடுங்க நான் பாத்துகிட்டே பன்றேன் சொன்னார். அதன் பிறகு அந்த இன்டெர்வியூ முடிந்தது. கலாம் சார் விவேக் சாரை பார்த்து உங்களுக்கு ஒரு புத்தகம் தரவான்னு கேட்டுட்டு, ஒரு புத்தகம் கொடுத்தார். நானும்  பக்கத்துல இருதேன். எனக்கும் ஒரு புத்தகம் கொடுத்தார்.

 

விவேக் சாரோட உங்க பயணம் எப்படி ஆரம்பித்தது என்ற கேள்விக்கு பதிலளித்த செல் முருகன், "எனக்கு முதலில் அஜித் சாரை தான் தெரியும். நான் பேஜர் விற்றுக்கொண்டிருதேன். அப்போ அஜித் சாருக்கு நான் பேஜர் கொடுத்திருக்கேன். அந்த நேரத்தில் அஜித் சாரோட மேனேஜர் சுதாகர், அவர்தான் விவேக் சாரோட மேனேஜரும் கூட. இந்த காலகட்டத்தில்தான் செல்போன் அறிமுகமானது. அப்போதான் விவேக் சாருக்கு செல்போன் வேணும்னு சுதாகர் சார் சொன்னார். நானும் கொண்டுபோய் கொடுத்தேன். ஆனால், அடுத்த நாளே அது வேலை செய்யல. உடனே என்ன விவேக் சார் திரும்ப கூப்பிட்டு, என்னய்யா பழைய ஃபோனை ஏதும் கொடுத்துடியான்னு கேட்டார். அப்படியெல்லாம் இல்ல சார் என்று  அதை மாற்றி நல்ல ஃபோன் கொடுத்தேன். இப்படிதான் எனக்கும் அவருக்கும் முதல் பழக்கம் ஏற்பட்டது. அதன்பிறகு முருகா உனக்கு காமெடி ஹியூமர் சென்ஸ் நல்லா இருக்கு, நீ எழுத முயற்சி பண்ணுன்னு அடிக்கடி சொல்லிட்டே இருப்பார். நானும் சரி சொல்லிட்டேன்.

 

அதுக்கப்புறம் ஒரு நாள் விவேக் சார் என்ன கூப்பிட்டு, முருகா திருநெல்வேலி படத்தில் மூடநம்பிக்கை எல்லாம் வச்சு பண்ற மாதிரி இருக்கு, அத வச்சு ஏதாவது காமெடியா சொல்லுன்னு கேட்டார், நானும் பல்லி விழுந்துட்டா எல்லாரும் அபசகுணமுன்னு சொல்றாங்களே அதை வைத்து பண்ணலாமான்னு கேட்டேன். அவரும் சரி சொல்லுன்னு சொன்னார். "ஒருத்தன் வேலைக்கே போகாமல் இருக்கான், ஏன்-ன்னு கேட்டா தொடையில பல்லி விழுந்திருச்சுன்னு சொல்றான். தொடையில பல்லி விழுந்தா என்ன? உனக்கென்ன ரம்பா தொடையா" என்று  சொன்னேன். இதே கேட்டுட்டு விவேக் சார் விழுந்து விழுந்து சிரிச்சாரு. அப்படி ரெண்டு மூணு சொல்லிருக்கேன். அதுக்கு அப்புறம் ஒரு காமெடி ஸ்கிரிப்ட் எழுதி விவேக் சார் கிட்ட கொடுத்தேன். இதன் படிச்சுட்டு யோவ் என்னையா உன் தமிழ்ல மண்ணு லாரி ஏறின மாதிரி இருக்குனு கேட்டு கலாய்ச்சிட்டார். ஏன்னா அதுல அவளோ எழுத்து பிழை இருந்துச்சு. என்கிட்ட அவரு கேட்டுகிட்டே இருப்பாரு. இந்த சீன் நடிக்கிறியா, அந்த சீன் நடிக்கிறியான்னு. எனக்கு எதுமே வராது என்ன விட்டுடுங்கன்னு சொல்லிடுவேன். ஆனால், யூத் படத்தில்தான்  நான் முதல் முறையாக நடித்திருந்தேன். அன்றைக்கு அந்த கேரக்டர் பண்ண வேண்டியவர் வரவில்லை. அதனால் விவேக் சார் என்ன கட்டாயப்படுத்தி பண்ண வைத்தார். அந்த படத்தில் "என்னடா கமிஷனர் விஜய் குமாருக்கும், நடிகர் விஜய் குமாருக்கும் வித்தியாசம் தெரியாத திருடனா இருக்கியே" என்ற வசனமும் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் பிறகு தான் பல படங்களில் நடித்தேன். ஷூட்டிங்கை ஒரு ஓரமா வேடிக்கை பார்த்துகிட்டு இருந்த என்ன நடிக்கவச்ச பெருமை விவேக் சாரை தான் சேரும்" என்றார்.

 

விவேக்கின் மறைவுக்கு பிறகு நீங்க நடிக்கவே இல்லையே, அடுத்த உங்க திட்டம்  என்ன? எப்போ மீண்டும் நடிக்க ஆரம்பிப்பிங்க? என்ற கேள்விக்கு பதிலளித்த முருகன், "நான் ஒரு 25 வருசமா விவேக் சார் கூடவே இருந்துட்டேன். அவரு திடீர்னு விட்டுட்டு போனதும் என்னால ஒண்ணுமே பண்ண முடியல. பெற்றோர்கள் குழந்தைகளை ஸ்கூல் கேட் வரைக்கும் கூட்டிட்டு போவாங்க, அதுக்கப்புறம் திரும்பி பார்த்த உடனே காணாமல் போயிருவாங்க. அந்த மாதிரிதான் இப்போ விவேக் சார் என்ன விட்டுட்டு போய்ட்டாரு. அது எனக்கு பெரிய இழப்பு. என்னால தாங்கவே முடியல. அதுக்கப்புறம் நிறைய பேர் என்கிட்டே இன்டெர்வியூ கேட்டு வருவாங்க. ஆனால், நான் கொடுக்க மாட்டேன்.  ஏன்னா அவரை பற்றி பேசும் பொழுது நான் அழுதுருவேன். அப்புறம் அதையே திரும்ப திரும்ப போட்டுக்கிட்டு இருப்பாங்க. அதுனாலதான் நான் கொடுக்கவில்லை.

 

அவர் இறந்த பிறகு நிறைய பேர் ஆறுதல் சொன்னாங்க சமூக வலைதளத்தில் இன்னுமும் சொல்லிக்கிட்டுதான் இருக்காங்க. அவங்க எல்லாருக்கும் என் நன்றி. இப்போ தாணு சார் தயாரிக்கும் ஒரு படத்துல நடிக்கிறேன். அப்புறம் பாபி சிம்ஹா சார் படத்துல நடிக்கவுள்ளேன். சார் மறைவுக்கு அப்புறம் ஒரு சின்ன பிரேக் தேவைப்பட்டது. அதனால்தான் இந்த கேப். தொடர்ந்து நடிப்பேன். சார் கூட இருக்கும் போது எல்லாம் எனக்கு ஒரு அலுவலகத்தில் வேலை பார்ப்பது போன்று இருக்காது. அவ்வளவு ஜாலியா இருக்கும், காலைல ஆரம்பிச்சு இரவு வரைக்கும் முருகா முருகான்னு சொல்லிகிட்டே இருப்பார். ஒரு நாள் விவேக் சார் என்கிட்டே செக் கொடுத்து பேங்க்ல பணம் எடுத்துட்டு வர சொன்னாரு. நானும் வாங்கிட்டு போய் பேங்க்ல பார்க்கிறேன். செக்ல பின்னாடி பக்கம் விவேக் சார் கையெழுத்து போடல . அதன பிறகு அவருக்கு போன் பண்ணேன். யோவ் என்னய்யா ஒழுங்கா பார்த்து வாங்கிட்டு போ மாட்டியானு கேட்டுட்டு; சரி வந்து வாங்கிட்டு போ-ன்னு சொன்னார். நானும் போனேன். விவேக் சார் செக்கில் கையெழுத்து போட்டு தர்றேன்னு கேட்டார். இல்ல சார் நானே போட்டுட்டேன்னு சொன்னேன். அதை கேட்டுட்டு நீ எப்படியா போட்ட. அவங்க ஒன்னும் சொல்லலையான்னு கேட்டாரு. ஒன்னும் சொல்லலை சார். பின்னாடி உள்ள கையெழுத்து ஓகே,  ஆனால் இந்த முன்னாடி உள்ள கையெழுத்து போட்டது யாருன்னு கேட்டாங்கனு சொன்னேன். நீ பாட்டுக்கும் வர்ற செக் வாங்குற, கையெழுத்து போடுற எனக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குதுன்னு சொல்லிட்டு சிரிச்சாரு"என்றார். 

 

இதன் பிறகு தொடர்ந்து பேசிய செல் முருகன், "நான் இளையராஜா சாரோட பயங்கரமான ரசிகன், அவரது  இசையில் ஒரு பாடல் பாடியிருக்கேன். ஒரு நாள் விவேக் சார் இளையராஜா சாரை பார்க்க போறேன் வர்றியான்னு கேட்டார். நான் உடனே வர்றேன்னு சொல்லிட்டேன். அப்போ பாலுமகேந்திரா சாரோட 'அது ஒரு கனாக்காலம்' படம் தனுஷ் நடிச்சுட்டு இருந்தார். அதில் முக்கிய கதாபாத்திரத்தில் விவேக் நடிச்சுட்டு இருந்தார். அந்த படத்துக்கு ராஜா சார்தான் இசை. அந்த படத்திற்கான பணியில் ராஜா சார் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுது தான் நானும் விவேக் சாரும் சந்திக்க போனோம். அவரை பார்த்த பொழுது இவர் என் நண்பர் செல் முருகன் என்று அறிமுகம் செய்து வைத்தார். ராஜா சாரும் வணக்கம் வைத்தார், நானும் வணக்கம் சொன்னேன். அப்போதான் இந்த கோரஸ் யாரு பண்றதுன்னு சொல்லிட்டு என்னைய பார்த்து ’ராஜா சார் நீ பாடுறியான்னு கேட்டார், நானும் உடனே ஓகே சொல்லிட்டேன்’ அப்படின்னு சொன்னார். அப்புறம் கோரஸ் பாட நானும் ரெடி ஆகிட்டேன்.

 

என் கூட நல்லா பாட தெரிஞ்ச ரெண்டு பேரும் பாட ரெடி ஆயிட்டாங்க. விவேக் சார் பாடலை பாட ஆரம்பித்தார். அதன் பிறகு நாங்க கோரஸ் பாடினோம். உடனே இளையராஜா சார் நிறுத்துங்கன்னு சொல்லிட்டு, முருகா உங்களுக்கு ஸ்ருதி தப்புதே என்றார். சாரி சார் இப்போ ஒழுங்கா பாடுறேன் என்று திரும்பவும் கோரஸ் பாடினோம். திரும்பவும் நிறுத்துங்க என்றவர் 'முருகா உங்களுக்கு கோரஸ்ல ஸ்ருதி தப்புதே' என்று கூறினார். மூன்றாவது முறையும் அதுதான் நடந்தது. அதுக்கப்புறம் விவேக் சார் பக்கத்துல போய், ”சார் ஸ்ருதி ஸ்ருதின்னு சொல்றாங்களே அப்படின்னா என்ன”ன்னு கேட்டேன். யோவ் என்னய்யா இப்படி பண்ற. தூரப் போய் நில்லுயா என்றார். அதன் பிறகு அந்த கோரஸ் எல்லாம் பாடி பாடலை முடித்து விட்டோம். ஆனால் அடுத்த நாள் "சாரி விவேக் உங்களுக்கு காட்சிகள் கம்மியா இருக்கு அடுத்த படம் சேர்ந்து பண்ணுவோம்ன்னு" பாலுமகேந்திரா சார் கிட்ட இருந்து ஃபோன் வந்துச்சு.

 

ரொம்ப சந்தோஷமா இருக்குன்னு சொன்னார். என்ன சார் படம் போயிருச்சு சந்தோசம்னு சொல்றீங்க என்று கேட்டேன். இல்லைய்யா இந்த படம் பண்ணியிருந்தா நீ பாடுனது வெளில வந்துருக்கும்ல, இதன் மூலமா என் தமிழ்நாட்டு மக்களை காப்பாத்தியிருக்கேன். இந்த படத்துக்கான பணம் போனாலும் பரவாயில்லை. உன் குரல் வெளியே வராம போனிச்சுல. அது போதும் என்று கூறி சிரிச்சார். இப்படி ஏராளமான நிகழ்வுகள் இருக்கு. அவர் இப்போவும் கூடவே இருக்குற மாதிரிதான் இருக்கு. பூச்சி முருகன் சார் சொன்னாரு இன்னைக்கு ஈஸ்டர் தினம் இயேசுபிரான் உயிர்த்தெழுந்த தினம். இதே போன்ற விவேக் சாரும் திரும்பி வருவாருன்னு சொன்னார். எனக்கு ஈஸ்டர் அப்படின்னு கேட்கல, அவர் நட்ட 33 லட்சம் மரங்களின் ஆக்ஸிஜன் மூலமாக "ஹீ ஈஸ் தேர்” (அவர் இன்னமும் இங்கேதான் இருக்கிறார்) என்று சொன்னதாகத் தான்  தோணுது" என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்