விஜய்யின் மக்கள் இயக்கம், சமீப காலமாகத் தீவிரமாகச் செயல்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் வழக்கறிஞர் அணியை ஒருங்கிணைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தியது. அதன் தொடர்ச்சியாக இன்று தகவல் தொழில் நுட்ப அணியின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "இதற்கு முன்பாகவும் தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டம் நடைபெற்றிருக்கிறது. மாவட்ட வாரியாக அந்த கூட்டம் நடைபெற்றது. இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள ஐடி அணி நிர்வாகிகள் கலந்து கொள்ளும் வகையில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
தளபதியுடைய சொல்லுக்கிணங்க யார் என்ன பேசியிருந்தாலும் அவர்களை நாகரிகமாகத் தான் அழைக்க வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர்களை இழிவு படுத்தியோ, தேவையில்லாத சொற்களை சொல்லியோ எதுவும் செய்யக் கூடாது என்பது தளபதியுடைய உத்தரவு. மேலும் யார் என்ன சொன்னாலும் நம்ம இயக்க வேலையை மட்டும் கவனிக்க வேண்டும் எனவும் சொன்னார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் அடையாள அட்டை வழங்கப்பட்டது. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பது தளபதியுடைய நோக்கம். அதை மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாக சமூக வலைத்தளங்களில் இந்த அணி செயல்படுவார்கள் என நம்புகிறோம்" என்றார்.