சின்னத்திரையில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு வந்த முனாவர் பரூக்கி, ஸ்டாண்ட்-அப் காமெடியனாகவும் ராப் படகராகவும் பிரபலமானார். இவர் 2021 ஆம் ஆண்டில், ஒரு ஸ்டாண்ட்-அப் நிகழ்ச்சியின் போது இந்து கடவுள்களை பற்றி கருத்து தெரிவித்த நிலையில், இந்து மத உணர்வுகளைப் புண்படுத்தியததாக அவர் மீது புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக அவர் மீது வழக்கு பதியப்பட்டு ஒரு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் வலது சாரி அமைப்புகளின் அச்சுறுத்தல்களால் தான் நகைச்சுவை துறையிலிருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். அதன் பிறகு எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமலிருந்த முனாவர் பரூக்கி, 2022 ஆம் ஆண்டு ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சியில் கலந்து அதன் முதல் சீசனில் வெற்றி பெற்றார். மேலும் இந்தி பிக் பாஸ் சீசன் 17ல் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில், ஹூக்காவில் புகையிலை தொடர்பான காவல்துறையினர் சோதனையில் முனாவர் பரூக்கி கைது செய்யப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மும்பையில் உள்ள கோட்டை பகுதியில் ஹூக்கா பார்லரில் மூலிகை பொருள் என்ற பெயரில் ஹூக்காவில் புகையிலை பயன்படுத்தப்படுவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் அந்த பாருக்கு சென்ற காவல் துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இரவு 10.30 மணியளவில் தொடங்கிய அந்த சோதனை இன்று அதிகாலை 5 மணி வரை தொடர்ந்துள்ளது.
இந்த சோதனையில் மொத்தம் ரூ. 4,400 ரொக்கம் மற்றும் ரூ.13,500 மதிப்புள்ள 9 ஹூக்கா பானைகள் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையின் போது 14 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் பிக் பாஸ் 17 டைட்டில் வின்னர் முனாவர் பரூக்கியும் ஒருவர். இந்த வழக்கு தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே முனாவர் பரூக்கியிடம், ஜாமீனில் வெளிவரக்கூடிய குற்றம் என்ற வகையில், நோட்டீஸ் ஒன்றைக் கொடுத்துவிட்டு பின்பு காவல்துறையினர் விடுவித்தனர். இந்த சம்பவம் அங்கு சற்று பரப்பரப்பை ஏற்படுத்தியது.