நந்தா பெரியசாமி இயக்கத்தில் கௌதம் கார்த்திக், சேரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. இப்படத்தை ஶ்ரீ வாரி ஃபிலிம் சார்பில் பி. ரங்கநாதன் தயாரிக்க, சித்து குமார் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (06.12.2021) நடைபெற்றது.
விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இயக்குநர் பாரதிராஜா பேசுகையில், "இசை வெளியீட்டு விழாக்களுக்குச் சென்று சம்பிரதாயமாக மேடைகளில் பேசுவது எனக்குப் பிடிக்காது. இன்றைக்கு வரும் படங்களின் பெயர்களே புரிவதில்லை. ‘ஆனந்தம் விளையாடும் வீடு’ என்ற இந்தப் படத்தின் பெயரைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாக உள்ளது. இயக்குநர் நந்தா பெரியசாமி நல்ல கதாசிரியர், இயக்குநரும்கூட. மண் வாசனையோடு கதை சொல்கிறார். மேடையில் கௌதம் கார்த்திக் பக்கத்தில் அமர்ந்திருந்தேன். கார்த்திக்கை வைத்து படம் இயக்கியபோது இப்படி ஒருத்தன் வருவான் என்றெல்லாம் நான் நினைத்துக்கூட பார்க்கவில்லை. முத்துராமன் சார் படத்தில் நான் உதவி இயக்குநர். பின், அவருடைய மகன் கார்த்திக்கை வைத்து நான் படம் இயக்கினேன். தற்போது அவருடைய மகனோடு அமர்ந்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது. இன்று கூட்டு குடும்பமே அழிந்துவிட்டது. உறவுகள் அனைத்தும் தள்ளி நிற்கிறது. இந்தப் படம் அற்புதமான படமாக வந்துள்ளது. இதுதான் தமிழ்ப்படம். இந்தப் படத்தோடு சம்மந்தப்பட்டுள்ள அத்தனை கலைஞர்களுமே பெருமைக்குரியவர்கள். இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வரும்போது அக்கா, தங்கை, அண்ணன், தம்பி பற்றிய நினைப்பு வந்துவிடும். சமீபத்தில் சேரனின் ‘பொக்கிஷம்’ படத்தைப் பார்த்துவிட்டு அன்றைக்கு இரவு அவனுக்கு ஃபோன் செய்தேன். முன்னரே நான் ‘பொக்கிஷம்’ பார்த்திருந்தும்கூட இப்போது பார்த்தபோது வேறு மாதிரியாக இருந்தது. அற்புதமான கலைஞன் சேரன். இந்தக் குடும்ப படத்தை தமிழ் குடும்பங்களிடம் கொண்டு சேர்ப்பது ஊடகங்களின் கடமை” எனக் கூறினார்.