
ஹாலிவுட்டில் 1990-களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் வால் கில்மர். 1984 ஆம் ஆண்டில் ஸ்பூஃப் ஜானரில் வெளியான ‘டாப் சீக்ரெட்’ படம் மூலம் அறிமுகமானார். பின்பு ‘டாப் கன்’, ‘ரியல் ஜீனியஸ்’, ‘வில்லோ’, ’தி டோர்ஸ்’, ‘ஹீட்’, ‘தி செயிண்ட்’ போன்ற சூப்பர் ஹிட் படங்களில் நடித்தார். மேலும் புகழ்பெற்ற பேட்மேன் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் 1995ஆம் ஆண்டு வெளியான ‘பேட்மேன் ஃபாரெவர்’ படத்தில் நடித்திருந்தார்.
தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்து வந்த அவர் 2015ஆம் ஆண்டு தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். பின்பு குறைவான படங்களிலே நடித்து வந்தார். பின்பு தனது வாழ்க்கையை ஆவணப்படமாகத் தயாரித்திருந்தார். இதில் இவரே கதை எழுதி நடித்திருந்தார். பின்பு கடைசியாக 2022ல் ‘டாம் குரூஸ்’ நடிப்பில் வெளியான ‘டாப் கன்: மேவரிக்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்த நிலையில் வால் கில்மர்(65) காலமாகியுள்ளார். இவரது மறைவு ஹாலிவுட் திரையுலகிலும் சினிமா ரசிகர்களிடத்திலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ஜோன் வேலியைத் 1988ஆம் ஆண்டு திருமணம் செய்த வால் கில்மர் 1996ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். இவர்களுக்கு மெர்ஸிடிஸ் என்ற மகளும், ஜாக் என்ற மகனும் இருக்கின்றனர். வால் கில்மர் தனது கடைசி காலக்கட்டத்தை தனது குழந்தைகளுடன் கழித்து வந்தார். அவரது இறப்பு செய்தியை மகள் மெர்ஸிடிஸ் உறுதி செய்த நிலையில் நிமோனியோ எனும் நுரையீரல் தொடர்பான பாதிப்பால் வால் கில்மர் இறந்துள்ளதாக கூறியுள்ளார்.