Skip to main content

“தமிழ்நாட்டில் நடப்பது மன்னராட்சி தான்” - விஜய்க்கு போஸ் வெங்கட் விளக்கம்

Published on 03/04/2025 | Edited on 03/04/2025
bose venkat about tvk vijay

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கடந்த மாதம் 29ஆம் தேதி திருவான்மியூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், “அரசியல் என்றால் என்னங்க ஒவ்வொரு குடும்பமும் நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? இல்லை ஒரே ஒரு குடும்பம் மட்டும் தமிழ்நாட்டை சுரண்டி நன்றாக வாழ வேண்டும் என நினைப்பது அரசியலா? காட்சிக்கு திராவிடம் ஆட்சிக்கு திராவிட மாடல் என்று தினம் தினம் மக்கள் பிரச்சனைகளை மடைமாற்றி, மக்கள் விரோத மன்னர் ஆட்சியை நடத்துகின்ற இவர்கள் நமக்கு எதிராக செய்கின்ற செயல் ஒண்ணா? ரெண்டா? 

மாண்புமிகு மன்னராட்சி முதல்வர் அவர்களே.. மாண்புமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... பேரை மட்டும் வீரப்பா சொன்னால் பத்தாது அவர்களே.. செயலிலும் ஆட்சியிலும் அதை காட்ட வேண்டும் அடுத்த வருடம் தமிழ்நாடு இதுவரை சந்திக்காத ஒரு வித்தியாசமான ஒரு தேர்தலை சந்திக்கும். இதில் இரண்டே இரண்டு பேருக்கு நடுவில் தான் போட்டியே. ஒன்னு த.வெ.க இன்னொன்னு தி.மு.க” என்று பேசி திமுகவை கடுமையாக விமர்சித்திருந்தார். இதற்கு தி.மு.க. தலைவர்கள் பதில் கொடுத்தார்கள். 

இந்த நிலையில் தி.மு.க. மேடையில் நடிகர் போஸ் வெங்கட் விஜய்யை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசியதாவது “14 வயது இருக்கும் போதே முதல்வர் ஸ்டாலின் கடுமையாக உழைத்தவர். ஆனால் அந்த வயதில் நீங்கள் படம் நடித்துக் கொண்டிருந்தீர்கள். இப்போது வந்து அவரை அவரை போட்டி என சொல்கிறீர்கள். இது எந்த வகையில் அர்த்தமுள்ள வார்த்தை. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான் என அவர் சொல்லும் போது அனைவரும் அதை வரவேற்றனர். ஆனால் நீங்கள் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களே... என சொல்லி விமர்சிக்கிறீர்கள். திரு ஜோசஃப் விஜய் அவர்களே... இது தவறு. நீங்கள் 25 வயதில் என்ன சொன்னீர்கள் என்று தெரியும்.  ஏனென்றால் அந்த துறையில் இருந்து தான் நானும் வந்திருக்கிறேன். வாரிசு அரசியல் என் சொல்கிறீர்களே நீங்கள் யாருடைய வாரிசு. உங்கள் தாத்தா சினிமாக்காரர், மாமா சினிமாகாரர், அம்மா சினிமாகாரர், சின்னம்மா சினிமாகாரர் அப்போது நீங்கள் சினிமா வாரிசு இல்லையா.  

அரசியல் வாரிசு என்ன என்பதை நான் இப்போது உங்களுக்கு புரியவைக்கிறேன். 17 வயதில் நீங்கள் உங்களுடைய தந்தை திரைக்கதை, வசனம் எழுதியிருப்பதைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். உங்கள் வீட்டில் விஜயகாந்த் வந்திருப்பார், அவர் சினிமா பேசுவதை பார்த்திருப்பீர்கள். ஆனால் நீங்கள் குறை சொல்கிறீர்களே எங்கள் சின்னவர் அவர் 14 வயதிலே இந்திரா காந்தியோடு அவர் தாத்தா பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்தார். உலக அறிவியலாளர்கள் தங்களது தாத்தாவோடு பேசியிருப்பதைப் பக்கத்தில் அமர்ந்து பார்த்திருந்தார்.   

மன்னராட்சி என்று சொல்கிறீர்களே உங்களுக்கு ஒரு விளக்கம் சொல்லட்டுமா. தமிழ்நாடு முடி சூடா மன்னன் எங்கள் முதல்வர், அவர் ஆட்சி செய்தால் அது மன்னராட்சிதான். தமிழை அழிக்க நினைப்பவர்கள், தமிழனை அழிக்க நினைப்பவர்கள், கல்வியை தடுக்க நினைப்பவர்கள் அவர்களை எல்லாம் எதிர்த்து போரிடக்கூடிய மன்னன் தான் எங்கள் மன்னன் என்று சொன்னால் இது மன்னராட்சி தான். சினிமாவில் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு நடந்த எந்த போராட்டங்களில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். கேரளாவில் ஒரு நடிகைக்கு நேர்ந்த பிரச்சனையால் ஒரு கமிஷன் உருவாக்கப்பட்டது. இங்கு நீங்கள் அதுபோல் செய்தீர்களா. சினிமாவில் நீங்கள் நல்ல நடிகர். நான் உட்பட அனைவரும் உங்கள் ரசிகர்கள் தான். ஆனால் அரசியலில் நீங்கள் பூஜ்ஜியம்” என்றார்.  

சார்ந்த செய்திகள்