
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா(48) கடந்த மாதம் 25ஆம் தேதி மாரடைப்பால் காலமானார். மணிரத்னத்தின் பம்பாய் படத்தில் உதவி இயக்குநராக இருந்த இவர் தனது தந்தை பாரதிராஜா இயக்கத்தில் 1999ஆம் ஆண்டு வெளியான தாஜ்மஹால் படம் மூலம் நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து வருஷமெல்லாம் வசந்தம், அல்லி அர்ஜுனா, ஈரநிலம் போன்ற படங்களில் கதாநாயகனாக நடிகராக நடித்தார். இடையே சமுத்திரம், மகா நடிகன், அன்னக்கொடி உள்ளிட்ட பல படங்களில் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்தார். பின்பு ஷங்கரின் எந்திரன் படத்தில் மீண்டும் உதவி இயக்குநராக பணியாற்றி அதில் சிட்டி ரோபோவுக்கு டூப் போட்டிருந்தார் .
இயக்குநராக 'விசில்' என்ற தலைப்பில் ஒரு குறும்படத்தை இயக்கியுள்ளார். மேலும் 2023ஆம் ஆண்டு சுசீந்திரன் கதையில் வெளியான ‘மார்கழி திங்கள்’ படம் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்திருந்தார். இப்படத்தில் பாரதிராஜாவை முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வைத்து இயக்கியிருந்தார். இந்த சூழலில் அவர் திடீர் மறைவு திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனோஜின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின் முதல், திரைப்பிரபலங்கள் வரை பலரும் பாரதிராஜாவுக்கும் ஆறுதல் கூறி சென்றனர்.
இந்த நிலையில் மகனை இழந்து வாடும் பாரதிராஜாவுக்கு அவரின் நண்பரும் இசையமைப்பாளருமான கங்கை அமரன் ஆறுதல் கூறியுள்ளார். வீட்டு மொட்டை மாடியில் பாரதிராஜா சேரில் உட்கார்ந்திருக்க அவருக்கு அருகில் மற்றொரு சேரில் உட்கார்ந்திருந்த கங்கை அமரன் இளையராஜா இசையில் பாரதிராஜா இயக்கத்தில் உருவான பாடல்களை பாடி காண்பித்து அப்பாடல் உருவான விதத்தை சொல்லி நினைவுகூர்ந்தார். இதில் ‘சிறு பொன்மணி அசையும்’ பாடலை பாடி கங்கை அமரன் காண்பித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
முன்னதாக இளையராஜா மனோஜ் பாரதிராஜா மறைவுக்கு நேரில் வராமல் வீடியோ மூலம் அஞ்சலி தெரிவித்தார். மேலும் திருவண்ணாமலை கோயிலில் மோட்ச தீபம் ஏற்றி வழிபாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.