Skip to main content

என் வாழ்வின் பெருமைமிக்க சொல் ‘தோழர்’ - ராஜு முருகன்

Published on 03/04/2025 | Edited on 03/04/2025
raju murugan speech in 24th cpim congress

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாடு மதுரையில் நேற்று(02.04.2025) தொடங்கியது. ஏப்ரல் 6 வரை மொத்தம் 5 நாட்கள் இந்த மாநாடு நடக்கிறது. இதில் முதல் நாளான நேற்று மதுரை தமுக்கம் மைதானத்தில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக திரைத்துறையில் இருந்து இயக்குநர்கள் சசிகுமார் மற்றும் ராஜூ முருகன் ஆகியோரும் கலந்து கொண்டனர். 

அப்போது மேடையில் பேசிய ராஜூ முருகன், “எளிய மக்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரே இயக்கம் இடது சாரிகள் இயக்கம் தான். அந்த வகையில் எனக்கு பேச வாய்ப்பளித்த தோழர்களுக்கு நன்றி. சசிகுமார் என்னிடம் நீங்க கம்யூனிஸ்ட் தானே எனக் கேட்டார். அதற்கு நீங்களும் கம்யூனிஸ்ட் தான் என நான் சொன்னேன். தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த மனிதர்களில் சசிக்குமாரும் ஒருவர். மிகச்சிறந்த மனிதர்கள் எல்லோருமே கம்யூனிஸ்டாகத்தானே இருக்க முடியும். கம்யூனிஸ்ட் என்பது ஒரு கட்சி அல்ல. அது மனிதகுலத்துக்கான தத்துவம். நான் எப்போது என்னை முதல் முறையாக கம்யூனிஸ்ட் என்று உணர்ந்து கொண்டேன் என யோசிக்கையில் தன்னுடைய நான்கு பிள்ளைகளுக்கும் தாய்பாலை சரிசமமாக பிரித்து கொடுத்த என் அம்மாவில் இருந்துதான் கம்யூனிஸ்டாக ஆனேன். 

நான் இதுவரை என் வாழ்க்கையில் 20க்கும் மேற்பட்ட வேலைகளை செய்திருக்கிறேன். அதில் ஒரு எழுத்தாளராக, பத்திரிக்கையாளராக, திரைப்பட இயக்குநராக எப்போது பெருமையாக உணர்கிறேன் என பலமுறை என்னிடம் கேள்வி கேட்டிருக்கிறார்கள். எப்போதெல்லாம் தோழர் என்று அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் தான் நான் பெருமை பட்டிருக்கிறேன். என் வாழ்வை பெருமைமிக்க சொல்லாக மாற்றுவது தோழர் ராஜூ முருகன் என்ற அந்த வார்த்தைதான்.  

தமிழ் சினிமா என்ற பரப்பில் கம்யூனிஸ்டாக இனம் காட்டிக் கொண்டு இயங்குவது, ரொம்ப முக்கியமான விஷயம். இந்த வியாபார சூழலில் தன்னை ஒரு கம்யூனிஸ்டாக அறிவித்துக் கொண்டு தொடர்ந்து படங்கள் எடுக்கக்கூடிய சிக்கல்கள் எனக்கும் உண்டு. அப்படியான தருணங்களில் எல்லாம் வியாபாரமா, சினிமாவா என இருக்கும் போது நான் கம்யூனிஸ்ட்டாக இருப்பதை மட்டுமே விரும்பியிருக்கிறேன். மற்றதெல்லாம் எனக்கு முக்கியம் கிடையாது. கம்யூனிஸ்ட்டாக இருப்பது மட்டும்தான் முக்கியம். இந்த இந்தியாவில் காவி வெறியர்களுக்கு எதிராக முன்வைக்கக்கூடிய ஒரே விஷயம் மார்க்சியமாகத்தான் இருக்க வேண்டும். ஒட்டுமொத்த இடதுசாரிகள், ஜனநாயகவாதிகள், முற்போக்கு சக்திகள் ஒன்று திரண்டு அவர்களுக்கு எதிராக நிற்க வேண்டும். அதற்கும் சி.பி.எம். தலைமை தாங்க வேண்டும்” என்றார். 

மேலும் “இன்று வாக்கு அரசியல் என்பது மிகப்பெரிய வியாபாரம் இருக்கக்கூடிய பணத்தை முதலீடு செய்யக்கூடிய பகுதியாக மாறிவிட்டது. ஒரு கட்சி ஆரம்பித்தால் முதலில் மக்களைச் சந்திக்க வேண்டும். ஆனால் நம்ம தேர்தல் வியூக வகுப்பாளரைத்தான் சந்திக்கிறோம். ஒட்டுமொத்த தேர்தலும் வியூக வகுப்பாளர்களின் கையில் சிக்கியிருக்கிறது. பணத்தை முன்வைக்காமல் அறத்தை முன்வைத்துத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கிற கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. அதனால் தான் நாங்கள் அவர்கள் பக்கம் நிற்கிறோம். பணத்தை முற்றிலுமாக தள்ளிவிட்டு மக்களின் மனதை ஜனநாயகப் பாதையில் உணர்வுப்பூர்வமாகத் திருப்புவதற்கான வேலையை கலையின் வழியாகவும் செய்வதற்கு ஏராளமான தோழர்களை கம்யூனிஸ்ட் பாதையில் உருவாக்குவதற்கான தேவை நமக்கு இருக்கிறது” என்றார். 

சார்ந்த செய்திகள்