ஆந்திராவில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ‘காதலன்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘என்னவளே’ பாடலின் தெலுங்கு வடிவமான 'ஓ செலியா' பாடலை ஒரு கிராமத்துப் பெண் பாடும் வீடியோ சில தினங்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வைரலானது. யு டியூபில் வெளியான சில மணி நேரங்களிலேயே பல லட்சம் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்த இந்த வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு ‘இவர் யாரென்று தெரியவில்லை. அருமையான குரல்’ என்று பாராட்டியிருந்தார். இந்நிலையில் அந்தப் பெண்ணின் பெயர் பேபி என்றும், அவர் ஆந்திர மாநிலம் வடிசலேரு கிராமத்தைச் சேர்ந்தவர் என்றும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பேபியின் குரலால் ஈர்க்கப்பட்ட தெலுங்கு இசையமைப்பாளர் சலூரி கோட்டீஸ்வர ராவ் அவருக்கு தனது இசையில் பாட வாய்ப்பு அளிப்பதாகவும் அறிவித்துள்ளார். அந்த பெண்மணிக்கு வாய்ப்பு கிடைக்க காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் என்பதால் அவரது ரசிகர்கள் இந்த செய்தியை பகிர்ந்து ரகுமானை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.