செக்கச் சிவந்த வானம்... சமீபமாக நாம் பார்க்காத 'ஆக்ஷன்' மணிரத்னத்தை மீண்டும் கொண்டுவந்திருக்கிறது, வசூல் ரீதியான வெற்றியாகியிருக்கிறது. இந்த ஆண்டின் பெரிய ஓப்பனிங் படங்களில் ஒன்றாக சேர்ந்திருக்கிறது. நடிகர் சிம்புவுக்குத் தேவையான வெற்றியாகியிருக்கிறது. மேலும், படத்தின் இன்னொரு நாயகன் அருண் விஜயின் 25ஆவது படம் இது. தனது 25ஆவது படம் இவ்வளவு பெரிய கூட்டணியுடன் இவ்வளவு பெரிய வெற்றியாக அமைந்தது குறித்து மகிழ்ச்சியில் இருக்கிறார் அருண் விஜய். நமக்கு அவர் அளித்த பேட்டியில் ஒரு பகுதி...
STR பற்றி பல சர்ச்சைகள் உண்டு. இந்தப் படத்தில் எப்படி?
இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவர் கரெக்டா இருந்தார். என்ன தேவையோ அதை கரெக்டா கொடுத்தாரு, தேவை இல்லாம எதையும் உள்ள திணிக்கல. அவர் என்ன பண்றாருனு சரியா தெரிஞ்சு பண்ணாரு. எங்க யாருக்கும் அது பிரச்சனையா தெரியல. நிறைய விஷயங்களை, ரெண்டு பெரும் சேர்ந்து பேசி பண்ணோம். இதுல இருந்து சிம்பு ஒரு புதிய உயரத்துக்கு போவார்னு நினைக்கிறேன்.
அருண் விஜய் எது செய்தாலும் அஜித் ரசிகர்கள் கொண்டாடுறாங்க... அது எப்படி?
அது உண்மையா எனக்கு கிடைச்ச பெரிய பாக்கியம். நான் அவர்கூட படம் நடித்ததற்கு அஜித் ரசிகர்கள் மூலமா ஒரு பெரிய வரவேற்பு கிடைச்சுது. தனிப்பட்ட முறையில் என்றில்லாமல் பிற நடிகர்களின் ரசிகர்கள் காட்டும் அன்பு இருக்கே, அது எனக்கு ரொம்ப சந்தோசம். அது எப்போதுமே தொடர்ந்து நீடிக்கணும்னு நினைக்கிறேன்.
எம்.ஜி.ஆர். மடியில் நீங்கள் உட்கார்ந்து இருப்பது போல் ஒரு ஃபோட்டோ பார்த்தோம். அதைப் பற்றி?
எம்.ஜி.ஆர் சின்ன வயசுல இருந்தே எனக்கு ஒரு உத்வேகம் கொடுத்தவர். நாங்க சின்ன வயசா இருக்கும்போது எங்க கார் ட்ரைவர் மணி அண்ணான்னு ஒருத்தர் இருந்தார், அவர் எம்.ஜி.ஆர். சாரோட தீவிர ரசிகன். எப்பவும் கார்ல போகும்போது எம்.ஜி.ஆர். பாட்டுதான் ஓடும். இப்படிலாம் இருக்கும்போது அவர்மேல் எனக்கு ஒரு பிரமிப்பு வந்துச்சு.
நீங்க பார்த்த அந்த ஃபோட்டோ, ஒரு கல்யாண வீட்ல எடுத்தது. அப்பா கூட ஒரு கல்யாணத்துக்குப் போயிருக்கும்போது திடீர்னு 'இங்க வா'னு எம்.ஜி.ஆர். சார் கூப்பிட்டார். அப்பா, "உன்னைத்தான் கூப்பிட்றாங்க போ"னு சொல்லி அனுப்பிட்டாரு. நானும் சரினு போனவுடனே அவரோட மடியில் உக்கார வச்சிக்கிட்டாரு. "உன் பேர் என்ன?"னு கேட்டாரு, அப்போ அவருக்கு தொண்டையில் ஆப்ரேஷன் பண்ணியிருந்தாங்க, அதனால் அவர் பேசுனது எனக்கு புரியல, அப்பறம் பக்கத்தில் இருந்தவங்க சொன்னதும் என் பேர் சொன்னேன். என்னைத் தட்டி கொடுத்து நல்லா படிக்கணும்னு சொன்னாரு. கிட்டத்தட்ட ஒரு இருபது நிமிஷம் அவர் மடியில் உட்கார்ந்துட்டு இருந்தேன். நான் மறக்க முடியாத நாள் அது.
பேட்டியின் இறுதியில் அவரது சகோதரி வனிதா, தொடர்ந்து விஜயகுமார் மீதும் அருண்விஜய், ஹரி மீதும் எழுப்பி வரும் புகார்கள் குறித்துக் கேட்டோம். "உண்மையா இருந்தா அதுக்கு விளக்கம் கொடுக்கலாம், பதில் சொல்லலாம் பிரதர். தெரிஞ்சே சொல்லப்படும் பொய்களுக்கு பதில் கொடுத்து அதை பெருசாக்க விரும்பல" என்றார்.