ஷங்கர் - ராம் சரண் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘கேம் சேஞ்சர்’. கியாரா அத்வானி கதாநாயகியாக நடிக்க, எஸ்.ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த் மேகா, அஞ்சலி, நவீன் சந்திரா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பில் பெரும் பொருட்செலவில் தில் ராஜு தயாரிக்கும் இப்படத்திற்கு தமன் இசையமைக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் கதை எழுதியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத், நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் நடந்தது. இறுதிக்கட்டத்தை தற்போது எட்டியுள்ளது. இப்படம் அரசியல் சார்ந்து பல விஷயங்களைப் பேசும் படமாக இருக்கும் எனப் பரவலாகச் சொல்லப்படுகிறது. இப்படம் அடுத்த மாதம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் டல்லாஸ் நகரில், பிரம்மாண்ட நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டனர். நிகழ்வில் ஷங்கர் பேசுகையில், “எனது பாணியில் தனித்துவமான கதையுடன் ஒரு படத்தை உருவாக்க வேண்டும் என்று நான் எப்போதும் விரும்பினேன். அதன் விளைவுதான் கேம் சேஞ்சர். கடந்த மூன்று தசாப்தங்களாக நான் தெலுங்கு படம் எடுக்கவில்லை என்றாலும், தெலுங்கு பார்வையாளர்கள் எப்போதும் என் மீது பெரும் அன்பு செலுத்தினர். நான் முன்பு மற்ற ஹீரோக்களுடன் பணிபுரியலாம் என்று நினைத்தேன். ராம் சரணுடன் தெலுங்கில் அறிமுகமாகியதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இப்படத்தில் மூன்று கெட்டப்புகளில் நடித்துள்ளார். அப்பண்ணாவாக அவர் நடித்திருப்பது படத்தின் சிறப்பம்சமாக இருக்கும்” என்றார்.