தமிழ், மலையாளம், தெலுங்கு என 375 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள தேவா, அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். அந்த வகையில் மதுரையில் அடுத்த மாதம் ஜனவரி 18ஆம் தேதி அவருடைய நேரடி இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதையொட்டி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். மேலும் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
அப்போது அவரிடம் புஷ்பா 2 படம் பார்க்க சென்ற ரசிகை கூட்ட நெரிசலில் பலியானதை தொடர்ந்து அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இதற்கு முன்பு நிறைய சம்பவங்கள் இது போல நடந்து இருக்கிறது. அதை நம்மளே பெரிய மனசுடன் சமாதனப்படுத்தி கொள்ள வேண்டும். இந்த மாதிரி வழக்குகளில் யார் மீதும் குற்றம் சுமத்த முடியாது” என்றார்.
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 - தி ரூல்’. இப்படத்தின் சிறப்பு காட்சி படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி ( 39) என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜூன் கைது செய்யப்பட்டு தற்போது இடைக்கால ஜாமீனில் வெளியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.