சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 5ஆம் தேதி வெளியான படம் ‘புஷ்பா 2 - தி ரூல்’. இப்படத்தின் சிறப்பு காட்சி படம் வெளியாவதற்கு முந்தைய நாளான 4ஆம் தேதி ஹைதராபாத்திலுள்ள சந்தியா திரையரங்கில் இரவு திரையிடப்பட்டது. அப்போது, அங்கு அல்லு அர்ஜூன் திடீரென சென்றதால், அவரை பார்க்க ரசிகர்கள் முண்டியடுத்து கொண்டு சென்றனர். அந்த கூட்ட நெரிசலில் ரேவதி ( 39) என்ற பெண் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மகன் படுகாயமடைந்து மயக்கமான நிலையில் கீழே விழ, பின்பு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து 14 நாட்கள் தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த அந்த சிறுவன் கடந்த 18ஆம் தேதி மூளைச்சாவடைந்தார். இப்போது கோமாவில் இருக்கிறார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
முன்னதாக அந்த பெண் இறந்ததை தொடர்ந்து அல்லு அர்ஜூன் மீது எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திரையரங்கிற்கு சென்றதாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக அவர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டு கடந்த 13ஆம் தேதி கைதானார். அவருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல் கொடுக்கப்பட்ட நிலையில் கைதான அன்றே அவருக்கு நிபந்தனைகளுடன் கூடிய இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டது. பின்பு ஜாமீனில் வெளியே வந்தார். அவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து சிறப்பு காட்சியின் போது திரையரங்கிற்கு சென்ற அல்லு அர்ஜூனின், சிசிடிவி காட்சிகள் ஹைதராபாத் போலீசாரால் வெளியிடப்பட்டது. மேலும் அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது. அவர் திரையரங்கில் படம் பார்த்து கொண்டிருக்கும் போது, பெண் இறந்த விஷயத்தை தெரிவித்தும் வெளியே செல்ல மறுத்ததாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே லஞ்ச புகார் தொடர்பாக இடைநீக்கம் செய்யப்பட்ட ஹைதராபாத் துணை காவல் ஆணையர் விஷ்ணு மூர்த்தி, செய்தியாளர்களை சந்தித்த நிலையில் பெண் இறந்த விவகாரம் குறித்து பேசினார். அப்போது அல்லு அர்ஜூனை கடுமையாக சாடிய அவர், பா.ரஞ்சித் குறித்தும் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “மிடில் கிளாஸ் மக்கள் நல்ல சினிமாக்களை பார்க்க வேண்டும். ஓடிடி, தியேட்டர் என நாட்டில் எவ்வளவோ நல்ல சினிமாக்கள் வெளியாகின்றனர். கதாநாயக வழிபாடு உள்ள படங்களை பார்ப்பதற்கு பதிலாக பா.ரஞ்சித் போன்று சமூக பிரச்சனைகளை பேசும் படங்களை மக்கள் பார்க்க வேண்டும். அவரது படங்கள் காலத்தின் தேவை. ஆனால் கதாநாயக வழிபாடு உள்ள படங்கள் அதிகம் கொண்டாடப்படுகின்றனர். அதுதான் இங்கு பிரச்சனையாக இருக்கிறது. கமர்சியல் ஹீரோ படங்களை ஓ.டி.டி.யில் குறைந்த விலையில் பார்த்துக் கொள்ளலாம்” என்றார்.
இதையடுத்து காவல்துறை துணை ஆணையர் அக்ஷன்ஷ் யாதவ், விஷ்ணு மூர்த்தி காவல்துறையின் ஒழுங்கு விதிகளை மீறியதாக குற்றம் சாட்டினார். அவர், பேசியதாவது, “உயர் அதிகாரிகளிடம் முன் அனுமதி பெறாமல் அல்லது எந்த மூத்த அதிகாரிகளிடமும் தெரிவிக்காமல் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது. இது ஒழுங்கு விதிகளை மீறியுள்ள செயல். அவருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்க இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநருக்கு (டிஜிபி) அறிக்கை அனுப்ப உள்ளோம்” என தெரிவித்துள்ளார்.