தமிழில் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இப்போது வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை, வடிவேலு - ஃபகத் ஃபாசில் நடிக்கும் மாரிசன், சூரி - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகும் கருடன் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார்.
இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து தனது படங்களின் அப்டேட் மற்றும் அவரது சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து வருவார். ஆனால் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடிரென ஆக்டிவாக இல்லை. அவரது பக்கம் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா எனப் பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் சமீபத்தில் வெளியான விஜய் பட பாடல் கலவையான விமர்சனம் பெற்றதாகச் சில தகவல்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது.
இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உலா வந்த தகவலுக்கு தற்போது யுவன் ஷங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “இது ஒரு தொழில்நுட்ப கோளாறு, அதை சரி செய்ய என்னுடைய டீம் முயற்சி செய்து வருகிறது. விரைவில் வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.