![Arthana Binu issue](http://image.nakkheeran.in/cdn/farfuture/jl9gMv_C6Ftbap0eXxjRO26DFfzqlFJeeaaR6-Xg3BU/1688628267/sites/default/files/inline-images/162_21.jpg)
சமுத்திரக்கனி நடிப்பில் 2017ஆம் ஆண்டு வெளியான 'தொண்டன்' படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான கேரளாவை சேர்ந்த நடிகை அர்த்தனா பினு. பின்பு ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக 'செம' மற்றும் கார்த்தியின் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்போது தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் தனது தந்தையும் மலையாள நடிகருமான விஜயகுமார் மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோவில், "எனது பெற்றோர் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றவர்கள். நானும் எனது அம்மாவும் எனது சகோதரியும் 85 வயதிற்கு மேற்பட்ட எனது பாட்டியுடன் எங்கள் தாய் வீட்டில் வசித்து வருகிறோம். என் தந்தை பல ஆண்டுகளாக எங்கள் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து வருகிறார். அவர் மீது பல வழக்குகள் உள்ளன.
அவர் எங்கள் வீட்டு வளாகத்திற்குள் நுழைந்து கொலை மிரட்டல் விடுத்தார். கதவு பூட்டப்பட்டிருந்ததால் ஜன்னல் வழியாக என் தங்கையையும் பாட்டியையும் கொன்றுவிடுவதாக மிரட்டியதோடு நான் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவதாகவும், கீழ்ப்படியாவிட்டால் எந்த எல்லைக்கும் செல்வேன் என்றும் மிரட்டினார். எனக்கு நடிக்க வேண்டும் என்றால் அவர் சொல்லும் படங்களில் மட்டும் நடிக்க வேண்டுமாம். எனது பணியிடத்தில் அத்துமீறி நுழைந்து பிரச்சனைகளை உருவாக்கி என் அம்மாவின் பணியிடத்திலும் சகோதரியின் கல்வி நிறுவனத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியதற்கு எதிராக நானும் என் அம்மாவும் அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து விசாரணை நடந்து வருவதால்தான் இவையெல்லாம் நடக்கின்றன" எனக் குறிப்பிட்டார். மேலும் பல்வேறு நிகழ்வுகளை குறிப்பிட்ட நிலையில் இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.